

தாய்லாந்தின் பட்டயா நகரில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட் டோருக்கான உலக பள்ளிகள் இடையிலான செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வினி சாகர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இது அவருடைய முதல் உலக சாம்பியன் பட்டமாகும்.
கடைசிச் சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியனாகிவிடலாம் என்ற நிலையில் அவுரங்கா பாத்தைச் சேர்ந்தவரான தேஜஸ்வினி, இலங்கையின் கவின்யா மியூனி ராஜபக்சவை வீழ்த்தி வாகை சூடினார். 9 சுற்றுகளில் விளையாடிய தேஜஸ்வினி 6 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றார்.
வெற்றி குறித்துப் பேசிய தேஜஸ்வினி, “இந்தப் போட்டிக் காகத்தான் பல மாதங்களாகக் காத்திருந்தேன். இறுதியில் சாம்பியன் பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. போட்டியின் ஆரம்பத்தில் இஷாவிடம் தோல்வி கண்டதால் இந்தப் போட்டி எனக்கு கடும் சவாலாக இருக்கும் என நினைத்தேன். எனினும் அதிர்ஷ்டவசமாக நான் நம்பிக்கையை இழக்கவில்லை” என்றார்.
ஆடவர் 15 வயதுக்குட் பட்டோருக்கான போட்டியில் இந்தியாவின் ஆனந்தும், மகளிர் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் சலோனி சபோலும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.