ராஜஸ்தான் ராயல்ஸை வீட்டுக்கு அனுப்பிய டிவில்லியர்ஸ், மந்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸை வீட்டுக்கு அனுப்பிய டிவில்லியர்ஸ், மந்தீப் சிங்
Updated on
2 min read

புனேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, பெங்களூர் அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனால் இறுதிச் சுற்றில் முன்னேறுவதற்கான ‘வெளியேற்றுதல்’ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராஞ்சியில் எதிர்கொள்கிறது பெங்களூரு.

முதலில் பேட் செய்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ரன்கள் எடுக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 109 ரன்களில் 19-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

கிறிஸ் கெய்ல் 26 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்சருடன் 27 ரன்கள் எடுத்து குல்கர்னி வீசிய பந்தை ஒரு சுற்று சுற்றினார் பந்து சிக்கவில்லை பவுல்டு ஆகி வெளியேறினார்.

பிறகு 8-வது ஓவரில் மீண்டும் தவல் குல்கர்னி, ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் ஒரு பந்தை வீச அதனை லெக் திசையில் திருப்பி விட முயன்ற கோலியின் ஷாட் விரயமானது, மட்டையை முதலிலேயே லெக் திசை நோக்கி திருப்பி விட்டார், பந்து சற்று தாமதமாக வர முன் விளிம்பில் பட்டு குல்கர்னியிடம் கேட்ச் ஆனது. 12 ரன்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் கோலி வெளியேறினார்.

டிவில்லியர்ஸ், மந்தீப் சிங் வெற்றி-சதக்கூட்டணி:

அதன் பிறகு ராஜஸ்தான் தன் பிடியை நழுவ விட டிவில்லியர்ஸ், மந்தீப் சிங் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 113 ரன்களைச் சேர்த்தனர். இந்த விக்கெட்டுக்காக ஓவருக்கு 10 ரன்கள் விகிதத்தில் அவர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

முதலில் மந்தீப் சிங் ஆக்ரோஷம் காட்ட டிவில்லியர்ஸுக்கு பந்துகள் சிக்கவில்லை. அன்கிட் ஷர்மா அவருக்கு நன்றாக வீசினார். பிறகு டிவில்லியர்ஸ் அடிக்க ஆரம்பித்தவுடன் மந்தீப் சிங் சற்றே அடக்கி வாசிக்க, டிவில்லியர்ஸ் 38 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து மீண்டும் ஒருமுறை ரன் அவுட் ஆனார்.

மந்தீப் சிங் 34 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்சர்களுடன் இவர் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். ஸ்டூவர்ட் பின்னி 1 ஓவருக்கு 1 ரன் மட்டுமே கொடுத்த போதிலும் அவரை ஏன் பயன்படுத்தவில்லை என்பது ஒரு புதிரே.

ஜேம்ஸ் பாக்னர் 4 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து இந்த சீசனில் கடும் ஏமாற்றமளித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்த மைதானத்தில் இதுவரை 166 ரன்கள் என்ற இலக்கே வெற்றிகரமாக துரத்தப்பட்டுள்ளது. இதில் 180 ரன்களை துரத்தும் போது ராஜஸ்தான் பேட்ஸ்மென்கள் நிறைய தவறிழைத்தனர்.

வாட்சன்(10), 2-வது ஓவரில் அரவிந்த் பந்தை துரத்தி எட்ஜ் செய்து வெளியேறினார். சஞ்சு சாம்சன் (5), முன்னால் களமிறக்கப்பட்டதும் கைகொடுக்கவில்லை. ஹர்ஷல் படேல் அவரை பவுன்ஸ் செய்து காலி செய்தார். தேவைப்படும் ரன் விகிதம் எகிறிக் கொண்டே செல்ல கேப்டன் ஸ்மித் (12) வீஸ பந்தில் டிவில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அஜிங்கிய ரஹானே மட்டும் ஒரு முனையில் 4 பவுண்டரிகளுடன் 39 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து எதிர்முனையில் வரிசையாக ஆட்டமிழந்து வரும் வீரர்களினால் நெருக்கடிக்குள்ளாகி 14-வது ஓவரில் அவுட் ஆனார். வழக்கமாக அதிரடி காட்டும் ஹூடா 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் 11 ரன்களிலும் பாக்னர் 4 ரன்களிலும் சொதப்பி வெளியேறினர். விளைவு ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய தோல்வி.

பெங்களூர் அணியில் அரவிந்த், படேல், வீஸ, சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாகத் தொடங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கிய போட்டிகளிலெல்லாம் தோல்வி தழுவியதால் இந்தப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஸ்மித், வாட்சன், தொடர் முழுதும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடியும் இறுதிக்குள் அந்த அணி நுழைய முடியாமல் போனதற்குக் காரணம், வீரர்களிடையே கம்யூனிகேஷன் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in