

ராஞ்சியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிக்குள் நுழைந்து சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி போட்டி பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
139 ரன்களுக்கு பெங்களூருவை சுருட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20-வது ஓவரின் 5-வது பந்தில் அஸ்வினின் ஒரு ரன் மூலம் இலக்கை எட்டி வெற்றியைச் சாதித்தது. நெஹ்ரா ஓரே ஓவரில் கோலி, டிவில்லியர்ஸை வீழ்த்தியதும் அஸ்வின் மிகச்சிக்கனமாக வீசியதும் மைக் ஹஸ்ஸி, தோனி ஆகியோரின் அனுபவமும் சென்னைக்க்கு வெற்றியைத் தேடித்தந்தது.
இந்தப் போட்டி பற்றி தோனி கூறும்போது, “140 ரன்கள் என்ற இலக்கு, அடித்து ஆடுவதா அல்லது விக்கெட்டுகளை காத்துக் கொண்டு சீராக துரத்துவதா என்ற இரட்டை நிலையை எப்பவும் ஏற்படுத்தும்.
இரவு நேர பனிப்பொழிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும் குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்தது. அஸ்வினுக்கு எனது பாராட்டுகள். அவர் மிகச்சிறப்பாக வீசியதாக நான் கருதுகிறேன். அவருக்கு உறுதுணையாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக வீசினர்.
கெயிலுக்கு எதிராக ரெய்னாவை பயன்படுத்தினேன், காரணம் இடது கை ஸ்பின்னர்களை அவருக்கு எதிராக பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்தோம்.
இந்தப் பிட்சில் இரு அணிகளுக்கும் சமமான ஸ்கோர் எது என்பதை நிர்ணயிக்க முடியவில்லை. இது உயர்-அழுத்த போட்டி, பெங்களூரு அணி 10 அல்லது 12 ரன்கள் குறைவாக எடுத்ததாக நான் நினைக்கிறேன்.
அனைத்துப் போட்டிகளிலும் விளையாடும் பழக்கம் எங்களிடம் ஏற்பட்டுவிட்டது. சில போட்டிகளில் சரியாக ஆடவில்லை.
இறுதிப் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவோம்” இவ்வாறு கூறினார் தோனி.