

19-வது ஃபெடரேஷன் கோப்பை சீனியர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் லட்சுமணன், சூர்யா ஆகியோர் 2-வது தங்கப் பதக்கம் வென்றனர். இவர்கள் இருவரும் ஏற்கெனவே 5,000 மீ. ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மங்களூருவில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி நாளான நேற்று நடைபெற்ற ஆடவர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான லட்சுமணன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். அவர் பந்தய இலக்கை 29 நிமிடம், 53.18 விநாடிகளில் எட்டினார். ராணுவ வீரர் கோபி (29:52.26) 2-வது இடத்தையும், கேதாராம் (29:53.18) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
தங்கப் பதக்கம் வென்ற லட்சுமணன் கூறுகையில், “இந்த வெற்றி எனக்கு மனநிறைவு அளிக்கவில்லை. ஆசிய தடகளப் போட்டிக்காக தீவிரமாக பயிற்சி பெற்று வரும் தற்போதைய தருணத்தில் நான் எதிர்பார்த்த நேரத்தில் இலக்கை எட்ட முடியவில்லை” என்றார்.
மகளிர் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத் தில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.சூர்யா 34 நிமிடம் 42 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கத் தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் சஞ்ஜீவினி பாபுராவ் 2-வது இடத்தையும் (34:52.91), சுவாதி ஹரிபாபு 3-வது இடத்தையும் (34:53.70) பிடித்தனர்.
தங்கப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய சூர்யா, “இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைந் தாலும், ஆசிய தடகளப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது கொஞ்சம் வருத்தமளிக்கிறது” என்றார். ஆசிய தடகளப் போட்டிக் கான தகுதிச்சுற்று நேரம் 33 நிமிடம் 40 விநாடிகளாகும். சூர்யாவின் ‘பெர்சனல் பெஸ்ட்’ 33 நிமிடம் 56 விநாடிகள் ஆகும்.