Published : 29 May 2015 07:34 PM
Last Updated : 29 May 2015 07:34 PM

மோசடி கேட்சை எடுத்து லாராவை வீழ்த்தியதில் பெருமிதம் தேவையா? - ஸ்டீவ் வாஹ் மீது ரிச்சர்ட்ஸ் பாய்ச்சல்

1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ந்தன. முதலில் ஆம்புரோஸ், ஸ்டீவ் வாஹ் நடத்தை மீது தனது விமர்சனத்தை பகிரங்கமாக தனது சுயசரிதையில் எழுதினார்.

தற்போது ஆஸ்திரேலிய அணி, மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து பழைய சர்ச்சைகள் கிளம்புகின்றன என்றாலும் ஸ்டீவ் வாஹ் பிடித்த ‘மோசடி’ கேட்சிற்கு பிரையன் லாரா வெளியேறியது உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசடிகளில் புகழ்பெற்றது.

1995-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் பிரெண்டன் ஜூலியன் அன்று அசத்தினார்.

அப்போது பிரையன் லாரா தனது எதிர்தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி 65 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தினார். ஏனெனில் அப்போது லாரா, சச்சின் ஆகியோரது ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.

65 ரன்கள் எடுத்த லாரா பிரெண்டன் ஜூலியன் வீசிய ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தை பின்னால் சென்று ஒரு பளார் கட் அடித்தார். பாயிண்டில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் வாஹ் அதனை பிடிக்க முயன்றார் பந்து அவரது கையிலிருந்து தரையில் விழுந்தது. அதனை தரையிலிருந்து கண் இமைக்கும் கணத்தில் எடுத்து ஸ்டீவ் வாஹ், கேட்ச் பிடித்ததாகவே பந்தைத் தூக்கிப் போட்டு கொண்டாடினார். பிரையன் லாராவுக்கு கடும் சந்தேகம் எழுந்தது. ரீபிளேயில் பந்து தரையில் பிட்ச் ஆன பிறகு வாஹ் பிடித்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால் பிரையன் லாரா அவுட் என்று தீர்மானிக்கப்பட்டார்.

ஒரு பீல்டராக நிச்சயம் கிரிக்கெட் ஆட்ட உணர்வு உள்ள எந்த ஒரு வீரரும் சக வீரருக்கு இப்படிச் செய்யக் கூடாது. நேர்மையாக பந்தை பிடிக்கவில்லை என்றே ஸ்டீவ் வாஹ் கூறியிருக்க வேண்டும், ஆனால் அவர் பிடித்ததாகச் சாதித்தார்.

அப்போதே விவ் ரிச்சர்ட்ஸ், ஆஸி.யின் அந்த டெஸ்ட் வெற்றியை “ஸ்டீவ் வாஹ் (மோசடி) கேட்சினால் கிடைத்த பொள்ளல் வெற்றி” என்று கடுமையாகத் தாக்கினார்.

தற்போது ஸ்டீவ் வாஹின் ஏமாற்று வேலை குறித்து ரிச்சர்ட்ஸ் நினைவுகூரும் போது, “டிவி ரீப்ளேயில் பந்து பிட்ச் ஆகி சென்றது நன்றாகத் தெரிந்தது. நிச்சயம் அது பீல்டருக்குத் தெரியும். இயல்பாகவே அது தெரிந்திருக்கும்.

ஆனால் சில ஆஸ்திரேலிய வீரர்கள் - அனைவரும் அல்ல- நான் 1975-ம் ஆண்டு முதல் ஆடிவரும் காலங்களிலிருந்தே இம்மாதிரி செய்து வருகின்றனர்.

ஒரு அணி கையாலாகாத்தனமாக இத்தகைய உத்திக்குள் சரண் புகுவது பரிதாபத்துக்குரியது. அன்று நான் இதன் மீது கடும் கோபமடைந்தேன். நான் இப்படி ஒருக்காலும் செய்யக்கூடியவனல்ல.

இப்போது ஸ்டீவ் வாஹை ஆண்டிகுவா பக்கம் பார்த்தால் கூட நான் அவரது அந்தச் செய்கை குறித்து என்ன கூற வேண்டுமோ அதனை கூறிவிடுவேன்” என்றார் விவ் ரிச்சர்ட்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x