Last Updated : 05 May, 2015 06:19 PM

 

Published : 05 May 2015 06:19 PM
Last Updated : 05 May 2015 06:19 PM

எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம்

இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார்.

கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார்.

வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெட் ஆட்டத்தின் சூட்சமங்கள் தெரிந்தவர் வாசிம் அக்ரம்” என்று கூறினார்.

ஆனால் இந்திய அணி பயிற்சியாளர் ஆகும் வாய்ப்பு பற்றி வாசிம் அக்ரம் கூறும் போது, “எனக்கு வயது 49, குடும்பத்தை பிரிந்து என்னால் நீண்ட காலம் இருக்க முடியாது, மேலும் பயிற்சியாளர் பொறுப்பு என்பது மன அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய ஒரு பணி. கொல்கத்தா அணியுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த வாசிம் அக்ரம், “பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளர் பொறுப்பு வகிப்பது பற்றி அவர்கள்தான் வாய்ப்பை வழங்க வெண்டும். இன்னும் அவர்கள் என்னிடம் இது குறித்து கேட்கவில்லை” என்றார் வாசிம் அக்ரம்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இங்கிலாந்து வீரர்கள் பற்றி...

"ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு பண ரீதியாக மட்டும் பயனளிப்பதில்லை, மாறாக வீரர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவுவது. 50,000, 60,000 ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது என்பதே ஒரு பெரிய அனுபவம். இது தன்னம்பிக்கையை வளர்த்தெடுக்கும்.

பாகிஸ்தான், இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டின் பலன்களை இழந்துள்ளனர். எதிர்காலத்தில் பாகிஸ்தான், இங்கிலாந்து வீரர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார் வாசிம் அக்ரம்.

உமேஷ் யாதவ் பற்றி...

உமேஷ் யாதவ் உண்மையில் ஒரு சிறந்த பவுலராக உருவாகி வருகிறார். கற்றுக் கொள்வதில் கூர்மையானவராக அவர் உள்ளார். நிச்சயம் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடக்கூடியவர் உமேஷ் யாதவ் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார். வாசிம் அக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x