

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியில் இருந்து மூத்த வீரரான சந்தர்பாலை நீக்கிய தேர்வுக் குழு தலைவர் கிளைவ் லாயிட்டின் முடிவுக்கு முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள்-ஆஸ்திரே லியா இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஜூன் 3-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்குகிறது. சமீபத்தில் நடை பெற்ற போட்டிகளில் பெரிய அளவில் ரன் சேர்க்காத 40 வயதான சந்தர்பாலுக்கு ஆஸ்திரேலியத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட வில்லை.
இந்த விவகாரத்தில் சந்தர் பாலுக்கு ஆதரவாக களத்தில் குதித்த முன்னாள் கேப்டன் லாரா, சச்சின் தனது பிரிவு உபசார டெஸ்ட் போட்டியில் விளையாட பிசிசிஐ வாய்ப்பளித்ததைப் போன்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் சந்தர்பாலுக்கு வாய்ப்பளித்திருக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் கிளைவ் லாயிட்டுக்கு ஆதரவு தெரிவித் துள்ள ஹோல்டிங் மேலும் கூறியிருப் பதாவது: சந்தர்பால் தனது ஆட்டத்திறனை இழந்துவிட்டார். அவர் அணியில் இடம்பெறத் தகுதியான நபர் அல்ல என்பதை உறுதியாக நம்புகிறேன். கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறுவதற்காக பிரிவு உபசார தொடரை நடத்த வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை யில்லை. சந்தர்பால் இப்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாட தயாராக இருந்தாலும், சமீபத்திய தொடர்களில் அவர் சிறப்பாக ஆடவில்லை.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் விளையாடியதைப் பார்த்தேன். அதில் அவருடைய ஆட்டம் பழைய சந்தர்பாலின் ஆட்டமாக இல்லை. வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் அவருடைய செயல்பாடு மெதுவாக இருந்தது.
வரும் தொடரில் ஆஸ்திரேலி யாவின் வேகப்பந்து வீச்சு எப்படி இருக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். எனவே சந்தர்பால் இளம் வீரர்களுக்கு வழிவிட வேண்டும். சந்தர்பாலின் இடத்தை உடனடியாக யாராலும் நிரப்ப முடியாது. ஆனாலும் அவருக்குப் பதிலாக இளம் வீரரை சேர்க்க வேண்டிய நேரம் இது என்றார்.