டெல்லி டேர்டெவில்ஸுடன் இன்று மோதல்: முதலிடத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் சென்னை

டெல்லி டேர்டெவில்ஸுடன் இன்று மோதல்: முதலிடத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் சென்னை
Updated on
2 min read

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிட்ட சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூப்பர் கிங்ஸ் 8 ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

ஆனால் டெல்லி அணியோ இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 8-ல் தோல்வி கண்டதோடு, அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. கடந்த 1-ம் தேதி பஞ்சாபை வீழ்த்திய டெல்லி, அதன்பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் இப்போது சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.

பிளே ஆப் சுற்றை ஏற்கெனவே இழந்துவிட்ட டெல்லி அணி, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஆக்ரோஷமாக ஆடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, கேப்டன் தோனி, பிராவோ என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் யார் களத்தில் நின்றாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள். அதுதான் அந்த அணியின் பெரிய பலமும்கூட.

வேகப்பந்து வீச்சில் ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, டுவைன் பிராவோ கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணியும் அசத்தி வருகின்றன. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இன்றைய ஆட்டத்தில் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் இரு அரைசதங்களை மட்டுமே அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், டுமினி, யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், அல்பி மோர்கல் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகீர்கானின் வருகைக்குப் பிறகு ஓரளவு பலம் பெற்றாலும், எதிரணி மீது பெரிய அளவில் நெருக்கடி ஏற்படுத்த முடியவில்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டரும் ஓரளவு சிறப்பாக பந்து வீசி வருகிறார். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, டுமினி ஆகியோரையே நம்பியுள்ளது டெல்லி.

போட்டி நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் சூப்பர் கிங்ஸ் 11 முறையும், டெல்லி 4 முறையும் வெற்றி கண்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in