

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு அகில இந்திய ஹாக்கி போட்டியில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு- ஜலந்தர் அணிகள் மோதுகின்றன.
நேற்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதலில் சென்னை வருமான வரித் துறை அணியுடன் பெங்களூரு கனரா வங்கி அணி மோதியது. இதில் பெங்களூரு கனரா வங்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
40-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பின் மூலம் சென்னை வருமான வரித் துறை அணி வீரர் சார்லஸ், ஒரு கோல் போட்டார். பதிலுக்கு 51-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் ரமேஷ் ஒரு கோல் போட்டார். இதனால் ஆட்டம் விறுவிறுப்பானது. 56-வது நிமிடத்தில் பெங்களூரு கனரா வங்கி அணி வீரர் சேஷா கவுடா பீல்டு கோலடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
2-வது அரையிறுதிப் போட்டி யில் போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் அணியுடன், ஜலந்தர் பி.எஸ்.எப். அணி மோதியது. இப்போட்டியில் ஜலந்தர் பி.எஸ்.எப். அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், ஜலந்தர் பி.எஸ்.எப். அணியினர் 2 கோல்கள் அடித்தனர். போபால் எம்.பி.ஹெச்.ஏ. லெவன் அணி கோல் எதுவும் அடிக்கவில்லை.
இன்று நடைபெறும் இறுதி போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணியும், ஜலந்தர் பிஎஸ்எப் அணியும் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. முன்னாள் ஒலிம்பிக் வீரர் பல்விந்தர் சிங் ஷம்மி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசு வழங்கவுள்ளார்.