

ஓவலில் நடைபெற்ற இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து டக்வொர்த் லூயிஸ் முறையில் இலங்கையை வீழ்த்தியது. இதன் மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 39 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களை எடுக்க இலங்கை 27.5 ஓவர்களில் 144 ரன்களூக்குச் சுருண்டது.
இங்கிலாந்து அணியில் விளையாடிய பார்படாஸைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் பேட்டிங்கில் கடையில் இறங்கி 13 பந்துகளில் 38 ரன்களை விளாசியதோடு, பந்து வீச்சிலும் 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.
இங்கிலாந்து அணியில் கேரி பலான்ஸ் 64 ரன்களை எடுக்க அனுபவமிக்க இயன் பெல் 50 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து 101/2 என்று இருந்தபோது மழை வந்து ஆட்டம் இரண்டரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.
ஜோ ரூட் 45 ரன்களையும் ஜோஸ் பட்லர் 26 ரன்களையும் சேர்த்தனர். ஜோர்டான் களமிறங்கி 5 பவுண்டரிகளையும் இரண்டு அபார சிக்சர்களையும் அடிக்க இவரும் ஜோஸ் பட்லரும் இணைந்து கடைசி 7 ஓவர்களில் 93 ரன்கள் விளாசப்பட்டது. குலசேகரா வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களை எடுத்தார் ஜோர்டான்.
கடைசி ஓவரை மலிங்கா வீசியும் அடி நின்றபாடில்லை. அவரது ஓவரிலும் 19 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி பந்தை ஜோர்டான் லாங் ஆஃபில் அடித்த சிக்ஸ் அதிர்ச்சிகரமான ஒரு ஷாட் ஆகும்.
32 ஓவர்களில் 226 ரன்கள் இலக்கு என்று இலங்கைக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 6வது ஓவரில் 19/2 என்று திணறியது அப்போது ஜெயவர்தனே (35), தில்ஷன் (33) ஆகியோர் சேர்ந்து 44 ரன்களைச் சேர்த்தனர்.
ஆனால் பந்து வீச்சிலும் அசத்திய ஜோர்டான் 15வது ஓவரில் தில்ஷனை வெளியேற்றினார். தேர்ட்மேனில் தில்ஷான் அடித்த பந்தை பலான்ஸ் கேட்ச் பிடித்தார். பிறகு 21வது ஓவரில் வந்த ஜோர்டான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கையின் வாய்ப்புகளை மூழ்கடித்தார்.
தினேஷ் சந்திமால், குலசேகரா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார் ஜோர்டான். ஆஃப் ஸ்பின்னர் ஜேம்ஸ் டிரெட்வெல் 38 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.