

டுவைன் ஸ்மித்துக்கு தவறான அவுட் கொடுத்ததன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கும் உள்ளாகியுள்ளார் நடுவர் ரிச்சர்ட் இல்லிங் வொர்த்.
51 வயதாகும் இல்லிங்வொர்த் இங்கிலாந்தை சேர்ந்தவர். சுழற் பந்து வீச்சாளரான இவர் இங்கி லாந்து அணிக்காக 9 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகளில் பங்கேற் றுள்ளார். 1992, 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியிலும் விளையாடியுள்ளார்.
2006-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் முதல் தர கிரிக்கெட் போட்டிக்கு நடுவராக செயல்பட்டு, 2009-ம் ஆண்டு ஐசிசி-யின் சர்வதேச நடுவர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். 2013-ம் ஆண்டு ஐசிசி-யின் சிறந்த நடுவர்கள் குழுவில் இடம் பெற்றார். சில மாதங்களுக்கு முன்பு நடை பெற்ற உலகக் கோப்பை போட்டியிலும் நடுவராக பணியாற் றினார்.
ஐபிஎல் போட்டிகளில் உள்ளூர் நடுவர்கள் இடம் பெறவில்லை. சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சர்வதேச அளவில் சிறந்த நடுவர்களே களமிறக்கப்படுகின்றனர். எனினும் இல்லிங்வொர்த் முதல் ஓவரி லேயே அளித்த தவறான அவுட் போட்டியின் போக்கையே மாற்றி விட்டது என்பதே சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.
கிரிக்கெட் ஆடுகளத்திலும், வெளியிலும் எதற்குமே பெரிய அளவில் அதிருப்தியை வெளிப்படுத்தாத ‘கேப்டன் கூல்’ தோனி கூட, இல்லிங்வொர்த்தின் முடிவால் கடும் அதிருப்தி அடைந்து, அதனை போட்டி முடிவில் வார்த்தையாக வெளிப் படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கும் ரிச்சர்ட் இல்லிங் வொர்த் கள நடுவராக செயல் படவுள்ளார். இலங்கையின் குமார் தர்மசேனா அவருடன் மற்றொரு கள நடுவராக பணியாற்ற இருக்கிறார்.