Published : 31 May 2015 12:07 PM
Last Updated : 31 May 2015 12:07 PM

ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகள் மீது பிளேட்டர் சாடல்

அமெரிக்க புலனாய்வு அமைப்பு, சர்வதேச கால்பந்து சம்மேளனத் தின் (பிஃபா) மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சி யளிப்பதாக தெரிவித்துள்ள பிஃபா தலைவர் செப் பிளேட்டர், ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகள் அருவருக்கத்தக்க பிரச்சாரங்களில் ஈடுபட்டதாகக் கூறி கடுமையாக சாடியுள்ளார்.

ரூ.984 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக அமெரிக்கா கூறிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது ஒருபுறமிருக்க, 2018 மற்றும் 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யா மற்றும் கத்தாருக்கு வழங் கியதில் முறைகேடு நடந்திருப்ப தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜூரிச் போலீஸார், அங்குள்ள பிஃபா தலைமை அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.

பிஃபாவுக்கு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் மேற்கண்ட சம்பவங்கள் நிகழ்ந்தது செப் பிளேட்டருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில் 5-வது முறையாக பிஃபா தலைவராக தேர்வு செய்யப்பட்டார் பிளேட்டர்.

அதைத் தொடர்ந்து அமெரிக்க புலனாய்வு அமைப்பு மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்க நிர்வாகிகளை கடுமையாக சாடியுள்ள பிளேட்டர் மேலும் கூறியிருப்பதாவது:

பிஃபா கூட்டத்தை தடுத்தும் நிறுத்தும் முயற்சியாகவே பிஃபா நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப் பட்டதாக சந்தேகிக்கிறேன். பிஃபாவுக்கு எதிராக அவர்கள் வேண்டுமென்றே தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 2022 உலகக் கோப்பை போட்டியை நடத்த அமெரிக்க நாடுகளும் போட்டியிட்டன. ஆனால் வாக்கெடுப்பில் அவர்கள் தோல்வியடைந்தனர். வாக்கெடுப்பின்போது அனைவரும் கையெழுத்திட்டிருக் கிறார்கள். அதனால் அங்கு தவறு நடக்க வாய்ப்பு இல்லை. என்னை எதிர்த்து போட்டியிட்ட அலி பின் அல் ஹுசைன் ஜோர்டான் நாட்டின் இளவரசர். அந்த நாட்டின் முதல் ஸ்பான்சர் அமெரிக்காதான் என்றார்.

கால்பந்து விளையாட்டில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி பிஃபா மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அட்டார்னி ஜெனரல் லொரேட்டா லிஞ்ச் உள்ளிட்டோருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிளேட்டர், “அவர்களின் குற்றச்சாட்டால் நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இவ்வளவு நாட்கள் பிஃபா தலைவராக இருந்திருக்கிற நான், மற்றவர்களுடைய விஷயத்தில் என்ன நடந்தது என்பது தெரியாமல் அது தொடர்பாக எந்தவொரு கருத்தையும் தெரிவித்ததில்லை” என்றார்.

பிஃபாவில் நடந்த ஊழலுக்கு பொறுப்பேற்று பிளேட்டர் பதவி விலக வேண்டும் என ஐரோப்பிய கால்பந்து சங்கமும், அதன் தலைவர் மைக்கேல் பிளாட்டினியும் கூறியிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்கள் மீது சாடிய பிளாட்டினி, “இந்த அருவருக்கத்தக்க பிரச்சாரம் ஒருவரிடம் இருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய கால்பந்து சங்கத்திடமும் இருந்து வந்துள்ளது” என்றார்.

நீங்கள் பிளாட்டினியை மன்னீப்பீர்களா என பிளேட்டரிம் கேட்டபோது, “நான் எல்லோரையும் மன்னிக்கிறேன். ஆனால் மறப்பதில்லை” என்றார்.

அதேநேரத்தில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு அதிகாரி ரிச்சர்ட் வெப்பர், பிஃபா ஊழல் விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எச்சரித்துள்ளார்.

பிஃபா செயற்குழு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிளேட்டர், “2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் 32 அணிகள் விளையாடும். ஐரோப்பாவைச் சேர்ந்த 13 அணிகளுக்கும், தென் அமெரிக்காவைச் சேர்ந்த 4 அணிகளுக்கும் வழக்கம்போல் வாய்ப்பளிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x