

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய இளையோர் (யூத்) தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 400 மீ. ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ புதிய தேசிய சாதனை படைத்துள்ளார்.
போட்டியின் 3-வது நாளான நேற்று நடந்த 400 மீ. ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜிஸ்னா, 53.84 விநாடிகளில் இலக்கை எட்டியதன் மூலம் புதிய தேசிய சாதனை படைத்தார்.
இதே பிரிவில் பஹ்ரைனின் சல்வா ஈத் நாசர் (53.02 விநாடி) தங்கப் பதக்கமும், மலேசியாவின் ஷெரீனா சாம்சன் (55.14) வெண் கலப் பதக்கமும் வென்றனர்.
ஜிஸ்னா இலக்கை எட்டிய நேரம், இந்த ஆண்டில் இந்திய வீராங்கனைகளால் எட்டப்பட்ட 3-வது சிறந்த நேரமாகும். அனில்டா தாமஸ் ((52.71 விநாடி, தேசிய விளையாட்டுப் போட்டி), பூவம்மா (53.41 விநாடி, ஃபெடரேஷன் கோப்பை) ஆகியோர் ஜிஸ்னாவைவிட குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மற்ற இரு வீராங்கனைகள்.
கடந்த 3 நாட்களில் இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 5 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.