

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இதில் யூசுப் பதான் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தது பெரிய பங்களிப்பாக அமைந்தது.
அருமையான தொடக்கம் கண்டு நன்றாக ஆடி வந்த கொல்கத்தா 15-வது ஓவர் முடிவில் 111/5 என்று தடுமாறி வந்தது. இந்நிலையில் கொல்கத்தா கடைசி 5 ஓவர்களில் 52 ரன்களை விளாசி வெற்றி ஸ்கோராக அமைந்த 167-ஐ எட்ட யூசுப் பதானின் 30 ரன்கள் பெரிய பங்களிப்பு செய்தது.
தொடர்ந்து ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத், தொடர்ந்து விக்கெட்டுகளை சீராக இழந்து 132 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளுடன் முடிந்து போனது. மோய்ஸஸ் ஹென்றிகேஸ் 41 ரன்களையும், கரண் சர்மா 20 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 32 ரன்களையும் எடுத்தனர்.
உமேஷ் யாதவ், பிராட் ஹாக் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில் யூசுப் பத்தான் பங்களிப்பு பற்றி பேசிய மணீஷ் பாண்டே, "நான் நன்றாக பேட் செய்து வந்தேன். நான் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் இன்னும் ரன்கள் வந்திருக்கும். ஆனால் கடைசியில் 19 பந்துகளில் யூசுப் பத்தான் எடுத்த 30 ரன்கள் மிக மிக முக்கியமானது. இந்தப் பிட்சில் 167 ரன்கள் அருமையான ஸ்கோர், இதனை எட்ட யூசுப் பதானின் இன்னிங்ஸ் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்தது” என்றார்.
ஆனால், ஒரு ஓவர் வீசிய யூசுப் பதான் 19 ரன்கள் விட்டுக் கொடுத்தது பற்றி மணீஷ் பாண்டே எதுவும் தெரிவிக்கவில்லை.