சென்னை லீக் கால்பந்து: ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் சாம்பியன்

சென்னை லீக் கால்பந்து: ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் சாம்பியன்
Updated on
1 min read

செயின்ட் ஜோசப்-சென்னை கால்பந்து சங்கம் சார்பில் நடைபெற்ற சென்னை லீக் சீனியர் டிவிசன் கால்பந்து போட்டியில் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் அணி சாம்பியன் ஆனது.

சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்று வந்த சென்னை லீக்கின் கடைசி ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி போலீஸ் அணியைத் தோற்கடித்ததன் மூலம் 28 புள்ளிகளுடன் சாம்பியன் ஆனது ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ். ஈகிள்ஸ் தரப்பில் பாபாதுந்தே அயோமிட் பட்முஸ், ஒபாரா ஆகியோர் தலா இரு கோல்களையும், நந்தகுமார் ஒரு கோலையும் அடித்தனர்.

2012-ம் ஆண்டு சீனியர் டிவிசன் லீக்கில் விளையாட தகுதி பெற்ற ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் முதல்முறையாக சாம்பியன் ஆகியிருக்கிறது. முன்னதாக 2013-ல் 8-வது இடத்தையும், 2014-ல் 6-வது இடத்தையும் பிடித்திருந்தது.

சென்னை லீக் சீனியர் டிவிசனில் சாம்பியன் பட்டம் வென்ற 3-வது தனியார் கிளப் ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ் ஆகும். நேதாஜி கிளப் (2009) ஏரோஸ் எப்.சி. (2013) ஆகியவை சீனியர் டிவிசனில் சாம்பியன் பட்டம் வென்ற மற்ற தனியார் கிளப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை அதிக கோல்களை அடித்த அணி என்ற பெருமை சென்னை எப்.சி. அணிக்கு கிடைத்துள்ளது. அந்த அணி 31 கோல்களை அடித்தது. வெளிநாட்டு வீரர்கள் மட்டும் 62 கோல் அடித்துள்ளனர்.

அதிக கோலடித்தவர்கள் வரிசையில் ஒபாரா (ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ், 12 கோல்), ரீகன் (ஏஜிஓஆர்சி, 10 கோல்), ஹம்ஸா (சென்னை எப்.சி., 10 கோல்), பாபாதுந்தே (ஹிந்துஸ்தான் ஈகிள்ஸ், 10 கோல்), ஆகியோர் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in