

ஐபிஎல்-8-ல் சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா, சிறந்த கேப்டனாக வளர்ச்சி பெற்றிருப்பதாக சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
"மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக அவர் தொடங்கியது முதல் இப்போது அவர் இருக்கும் நிலை வரை ஒப்பிட்டால், இன்று அவர் நிச்சயம் வளர்ச்சியடைந்த ஒரு கேப்டனாகத் திகழ்கிறார். அவர் இப்போது முன்பில்லாததை விட தன்னம்பிக்கையுடன் செயல்படுகிறார். நிறைய மேடு பள்ளங்களை ஒரு கேப்டனாக அவர் சந்தித்ததோடு நிறைய சவால்களை எதிர்கொண்டார். இந்த சவால்கள் அவரை இன்று சிறந்த கிரிக்கெட் வீர்ராகவும், வளர்ந்த கேப்டனாகவும் கடினமான நபராகவும் மாற்றியுள்ளது.
அவர் திட்டங்களைச் செயல்படுத்திய விதம் குறிப்பாக இந்த சீசனில் அபாரமாக இருந்தது. ஓய்வறையில், வீரர்கள் சந்திப்புகளில் என்னவெல்லாம் திட்டம் தீட்டப்பட்டதோ அவற்றை சிறந்த முறையில் செயல்படுத்தினார் ரோஹித். பவுலர்கள் அளிக்கும் கருத்துகளைக் கொண்டு ஒரு கேப்டன் பற்றி நாம் நிறைய கூற முடியும். கேப்டன் என்ன கூறினாரோ அதனை பவுலர்கள் செயல்படுத்தினர்.
மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நிறைய விஷயங்களை நாம் திட்டமிடலாம், ஆனால் அவற்றை செயல்படுத்துவதில் கேப்டன், பவுலர்கள், பீல்டர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இந்த விதத்தில் ரோஹித் அருமையாக செயல்பட்டார்.
இந்தத் தொடரில் நாங்கள் தோல்விமுகத்துடன் தொடங்கினோம். இது கடினமாக இருந்தது. ஆனால் அந்தக் கணங்கள் சோதனைக்கணங்களாகும். இந்தத் தருணத்தில்தான் ஒன்று கூடி கடின உழைப்பை மேற்கொண்டோம். இந்த வெற்றி தற்செயலானது அல்ல. நாங்கள் இட்ட கடின உழைப்பின் பலன்.
அணியை வெற்றிப்பாதையில் திருப்ப முடியும் என்று நாங்கள் அனைவரும் உண்மையில் நம்பினோம். ஒரு விஷயத்தை நாம் எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
மிகவும் முக்கியமான விஷயமாக நான் கருதுவது என்னவெனில், நாங்கள் எந்த சமயத்திலும் எங்கள் திறமை மீதான நம்பிக்கையை இழக்கவில்லை. எந்த தருணத்திலும் வீரர்கள் தலையைத் தொங்கப்போட்டு, இது கடினமான சீசன், நமக்கு எதிர்காலம் இல்லை என்று நினைக்கவில்லை. குகையின் முடிவில் நாங்கள் எப்பவும் வெளிச்சத்தைக் கண்டோம்.
பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் பற்றி...
அவருக்கு (பாண்டிங்) எதிராக நாங்கள் விளையாடிய போது அவர் எப்பவும் விட்டுக் கொடுக்காத, அச்சமற்ற ஒரு போட்டி மனோபாவத்துடன் களமிறங்குவார். அதுதான் இங்கேயும் செய்து காட்டினார் பாண்டிங். எந்த ஒரு நிலையிலும் இந்த ஐபிஎல் தொடரில் நாங்கள் வெளியேறிவிடுவோம் என்று அவர் துளி கூட நினைக்கவில்லை.
தன்னம்பிக்கையுடன் அனுபவமும் உள்ள ஆலோசகர்கள் நமக்கு தேவை, ரிக்கி பாண்டிங் இரண்டிலும் சிறந்து விளங்குகிறார்.
இளம் வீர்ர்களில் சுசித், ஹர்திக் பாண்டியா அருமையாக ஆடினர். வினய் குமார் அனுபவ வீரர், ஆனால் மும்பை இந்தியன்ஸுக்கு முதல் முறையாக விளையாடுகிறார். அவர் தொடக்கத்தில் திருப்திகரமாக வீசவில்லை. ஆனால் முடிவில் ஜொலித்தார். சரியான நேரத்தில் அவர் தனது திறமையை வெளிப்படுத்தினார்” என்று சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல் இணையதள பேட்டியில் கூறினார்.