

கிறிஸ் கெயிலின் கேட்ச்சை இரு முறை கோட்டைவிட்டது எங்களுக்கு பாதகமாக அமைந்தது. இரு முறை ஆட்டமிழப்பதிலிருந்து தப்பிய கெயில் ஆட்டத்தை முற்றிலும் பெங்களூரு அணிக்கு சாதகமாக மாற்றிவிட்டார் என்று பஞ்சாப் அணியின் பயிற்சி யாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித் துள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 138 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் கிறிஸ் கெயில் 57 பந்துகளில் 117 ரன்கள் சேர்க்க, அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 13.4 ஓவர்களில் 88 ரன்களுக்கு சுருண்டது.
இந்தப் போட்டிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் பாங்கர் மேலும் கூறியதாவது: இந்த மைதானம் எவ்வளவு நல்ல மைதானம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கெயிலின் கேட்ச்சை இரு முறை கோட்டைவிட்டு விட்டோம்.
ஒருவேளை அதை பிடித்தி ருந்தால் அந்த அணியை கட்டுப் படுத்தியிருக்கலாம். 180 ரன்கள் இலக்காக இருந்திருந்தாலும் அதை துரத்திப் பிடித்திருக்கலாம் என்றார்.
பெங்களூருவுக்கு எதிராக ரன்களை வாரி வழங்கிய உங்கள் பவுலர்களின் நம்பிக்கையை அதிகரிக்க என்ன செய்யப் போகிறீர்கள் என கேட்டபோது,
“இந்த ஐபிஎல் தொடர் இதுவரை எங்களுக்கு கடினமான கட்டமாகவே அமைந்திருக்கிறது. முடிந்த அளவுக்கு வீரர்களிடையே உத்வேகத்தையும், நம்பிக்கை யையும் ஏற்படுத்த முயற்சிப்போம். ஆனால் சிறப்பாக ஆடாமல் நம்பிக்கையை பெற முடியாது. அதுதான் தற்போதைய பிரச்சினை” என்றார்.