

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 201 ரன்கள் குவித்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத், 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது.
சன் ரைசர்ஸ் ஹைதராபாத், தங்களது அயல்நாட்டு வீச்சாளர்களான டிரெண்ட் போல்ட், டேல் ஸ்டெய்ன் இருவரையும் இன்றைய ஆட்டத்தில் சேர்க்கவில்லை. இஷாந்த் சர்மா ஆடினார்.
டேவிட் வார்னர் வழக்கம் போல் (24 ரன்கள், 18 பந்து, 5 பவுண்டரி) அதிரடித் தொடக்கம் கொடுக்க, ஷிகர் தவன் 35 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 54 ரன்கள் விளாசி மிடில் ஓவர்களை கவனித்துக் கொள்ள, பிறகு இயன் மோர்கன் 28 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்சர்களுடன் 63 ரன்கள் விளாசினார். பொபாரா 17, மோய்சஸ் ஹெண்ட்ரிகேஸ் 20 ரன்களை சேர்க்க சன் ரைசர்ஸ் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியில் வாட்சன், தாம்பே, பாக்னர் விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் 4 ஓவர்களில் அஜிங்கிய ரஹானே, ஷேன் வாட்சன் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டீவன் ஸ்மித் 40 பந்துகளில் 68 ரன்களை விளாசி ராஜஸ்தான் துரத்தலை உயிர்ப்புடன் வைத்திருந்தார், ஆனாலும் தேவைப்படும் ரன் விகிதம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
கடைசியில் 3 ஓவர்களில் 57 ரன்கள் தேவை என்ற நிலையில் சஞ்சு சாம்சன், ஜேம்ஸ் பாக்னர் அதிரடி ஷாட்களை ஆடினர். இவர்கள் இருவரும் புவனேஷ் குமாரிடம் ஆட்டமிழந்தனர். கடைசியில் கிறிஸ் மாரிஸ் இறங்கி பிரவீண் குமாரை 3 சிக்சர்கள் தொடர்ச்சியாக அடித்து 9 பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால் கடைசியில் புவனேஷ், பிரவீண் குமார் வெற்றியைத் தடுத்தனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் 194/7 என்று முடிந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் 14 புள்ளிகளில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. சன்ரைசர்ஸ் அணி 10 புள்ளிகளுக்குச் சென்றனர். இன்னும் 4 ஆட்டங்கள் மீதமுள்ளன.
ஆட்ட நாயகனாக மோர்கன் தேர்வு செய்யப்பட்டார், அணிச் சேர்க்கையை சன் ரைசர்ஸ் மாற்றியதில் பலன் கிடைத்துள்ளது.
சுருக்கமான ஸ்கோர் விவரம்:
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்: 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 201
மோர்கன்: 63
ஷிகர் தவன்: 54
ராஜஸ்தான் ராயல்ஸ்: 194/7
ஸ்டீவ் ஸ்மித் 68
கிறிஸ் மோரிஸ் 34 நாட் அவுட்.