

ஐபிஎல்-8-ல் சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து மும்பை வான்கடே மைதான கொண்டாட்டங்களுக்கு ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி மும்பையை வந்தடைகிறது. இன்று இரவு 8 மணியளவில் அணியின் ஆலோசகர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது குடும்பத்தினர், நிதா அம்பானி ஆகியோர் வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
ஒட்டு மொத்த அணி, மற்றும் அணியின் பயிற்சியாளர்கள், உடல்தகுதி நிபுணர்கள் ஆகியோர் வெற்றிக் கொண்டாட்டத்துக்காக 8 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.
கொண்டாட்டத்தைக் காண, பங்கேற்க ரசிகர்களுக்கு அனுமதி இலவசம். மாலை 6.30 மணியிலிருந்து வான்கடே கதவுகள் ரசிகர்களுக்காகத் திறக்கப்படுகிறது.
மேலும் பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் முன்னாள், இந்நாள் நட்சத்திரங்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஒரு மணி நேரம் நடைபெறலாம் என்று தெரிகிறது.
2013-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் சென்னையை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றிய மும்பை இண்டியன்ஸ் நேற்று மீண்டும் அதே எதிரணியை மேலும் எளிதில் வீழ்த்தி கோப்பையை 2-வது முறையாகக் கைப்பற்றியது.