

டிவைன் ஸ்மித் சர்ச்சை எல்.பி. தீர்ப்பை விமர்சித்த சென்னை கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றில் நேற்று டிவைன் ஸ்மித்திற்கு நடுவர் தவறான தீர்ப்பளித்தது குறித்து எதிர்ப்பு கருத்தை வெளியிட்ட கேப்டன் தோனிக்கு 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியிடம் சென்னை நேற்று 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. போட்டி முடிந்து பரிசளிப்பு விழாவின் போது டிவைன் ஸ்மித்துக்கு தவறான தீர்ப்பு வழங்கப்பட்டதாக பொதுமேடையில் தோனி தெரிவித்தார்.
"நடுவரிசையில் விக்கெட்டுகளை இழந்தோம், டிவைன் ஸ்மித்துக்கு வழங்கப்பட்ட மோசமான தீர்ப்பை மறந்து விடவேண்டாம்” என்று தோனி பரிசளிப்பு மேடையில் கூறினார்.
இலக்கைத் துரத்திய சென்னை அணியின் தொடக்க வீரர் டிவைன் ஸ்மித், மலிங்காவின் முதல் ஓவரில் தாழ்வான புல்டாஸை கால்காப்பில் வாங்க நடுவர் இல்லிங்வொர்த் கையை உயர்த்தினார். ஆனால் பந்து லெக்ஸ்டம்புக்கு வெளியே சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதனை தோனி ‘மோசமான தீர்ப்பு’ என்று பொதுமேடையில் விமர்சனம் செய்தார். தவறை தோனி ஒப்புக் கொண்டார். இதனையடுத்து அவரது சம்பளத்தில் 10% தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.
வரும் வெள்ளிக்கிழமை ராஞ்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிக்குள் நுழையும் மற்றொரு வாய்ப்பைப் பெற்றுள்ளது. அதாவது இன்று நடைபெறும் பெங்களூர்-ராஜஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணியை சென்னை அணி சந்திக்கும்.