

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஹேப்பி பேமிலி திட்டம் சார்பில் ‘மிர்ச்சி நியான் ரன்’ என்ற இரவு நேர மாரத்தான் போட்டி கோவை, சென்னை, மதுரை ஆகிய இடங்களில் ஜூன் 5, 6, 7 தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதன்மை பொது மேலாளர் செ. செல்வன் ராஜதுரை அறிக்கை:
ரேடியோ மிர்ச்சி நிறுவனம் ‘மிர்ச்சி நியான் ரன்’ எனும் மிகப்பெரிய மாரத்தான் போட்டியை நடத்தவுள்ளது. இப்போட்டிக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஸ்பான்சர் செய்துள்ளது. இது தமிழ்நாட்டில் முதல் முறையாக நடைபெறும் இரவு நேர மாரத்தான் போட்டி.
மின்னொளியில் நடைபெறும் இப்போட்டியில் குடும்பத்தினர், தனிநபர்கள் 3 கி.மீ., தொலைவு ஓட்டப் பந்தயத்திலும், ஓட்டப் பந்தய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 9.83 கி.மீ. தொலைவு ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்கலாம்.
இப்போட்டி கோவையில் (ஹிந்துஸ்தான் மைதானம்) ஜூன் 5-ம் தேதியும், சென்னையில் (தாம்பரம் சிறப்பு பொருளாதார மண்டலம்) 6-ம் தேதியும், மதுரையில் (ரேஸ்கோர்ஸ் மைதானம் முதல் ராஜா முத்தையா மன்றம் வரை) 7-ம் தேதியும் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரம், ரூ. 10 ஆயிரம், ரூ. 7,500 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். போட்டியில் பங்குபெற விரும்புவோர் www.mirchineonrun.com என்ற இணையதள முகவரியில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.