

இந்திய டெஸ்ட் கேப்டன் கோலியின் உணர்ச்சிவசப்படும் மனநிலையைக் கட்டுப்படுத்தும் வலுவான பயிற்சியாளர் அணிக்குத் தேவை என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் கேப்டனுமான் பிஷன் சிங் பேடி கூறியுள்ளார்.
"விராட் கோலிக்கு ஒரு நல்ல பயிற்சியாளர் தேவை. அவரை வழிநடத்தும் பயிற்சியாளர் அவசியம் என்று நினைக்கிறேன். கோலி உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்தும் பயிற்சியாளர் தேவை. கோலியும் தனது நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் ஆட்டம் கபடியோ, கோ-கோ-வோ அல்ல. நீண்ட காலம் ஆட்டத்தில் நீடிக்க வேண்டுமானல் கோலி தனது கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
ஊடகங்கள் ‘கோலியை ஆக்ரோஷமான கேப்டன்’ என்று கொம்பு சீவி விடுகின்றன, இது அவரை அழித்து விடும். அவர் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரது ஒவ்வொரு அசைவும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஃபோர்க்கை வலது கையில் வைத்திருந்தாரா அல்லது இடது கையில் வைத்திருந்தாரா என்பது வரை அவரது நடத்தை துருவப்படும் எனவே அவர் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
சவுரவ் கங்குலியும், ரவி சாஸ்திரியும் கோலியின் அணுகுமுறையை எப்படி பார்க்கின்றனர் என்றும், சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் கோலியின் அணுகுமுறையை எப்படி பார்க்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் உள்ளன. கிரிக்கெட் என்ற விளையாட்டு நன்மதிப்புகளை கற்றுக் கொடுப்பதாகும்” என்றார்.
இந்திய அணியில் மீண்டு ஹர்பஜன் தேர்வு குறித்து...
ஹர்பஜனை மீண்டும் டெஸ்ட் அணியில் தேர்வு செய்திருப்பது பின் நோக்கிய நகர்வு. ஐபிஎல் கிரிக்கெட்டினால்தான் நமக்கு தரமான ஸ்பின்னர்கள் கிடைப்பதில்லை. ஒரு இளம் பவுலர் ரன் இல்லாத ஒரு டாட் பாலை வீசினார் என்றால் உடனே வர்ணையாளர்கள் ‘பிரில்லியண்ட் டாட் பால்’ என்கின்றனர். டாட் பால்-ஐ நாம் எப்படி ‘பிரில்லியண்ட்’ என்று அழைக்க முடியும்?
4 ஓவர்களை ஐபிஎல்-ல் வீசும் கரண் சர்மாவை டெஸ்ட் அணியில் தேர்வு செய்துள்ளனர். அவர் 35-40 முதல் தர போட்டிகளில் ஆடியுள்ளார், அதில் அவர் என்ன செய்து விட்டார்?
ஐபிஎல் கிரிக்கெட்டினால் நான் இப்போதெல்லாம் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நிறைய இளம் வீரர்களைப் பார்த்து வருகிறேன். பஞ்சாப் தொடக்க வீரர் மனன் வோரா, உன்முக்த் சந்த், சஞ்சு சாம்சன் ஆகியோர் குழப்பத்தில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். இப்போது இந்த புதுமுக வீரர் சர்பராஸ் கான். அவரிடம் திறமை உள்ளது ஆனால் அவர் முதல் தர கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடுவது அவசியம். முதல் தர கிரிக்கெட்டை பின்னுக்குத் தள்ளி ஐபிஎல் ஆட்டத்தை மட்டும் அணித்தேர்வுக்கான அளவுகோலாகக் கொள்ளக் கூடாது” என்று விளாசினார் பிஷன் சிங் பேடி.