

உஸ்பெகிஸ்தானின் சமார்க்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள யூகி பாம்ப்ரி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1-6, 7-5, 7-6 (1) என்ற செட் கணக்கில் செர்பியாவின் லாஸ்லோ டீரை வீழ்த்தினார். 2 மணி நேரம், 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மிக மோசமாக இழந்தார் யூகி.
இதனால் அவர் தோல்வியடைந்துவிடுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் சரிவிலிருந்து வேகமாக மீண்ட யூகி, கடும் போராட்டத்துக்குப் பிறகு அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி காலிறுதிக்கு முன்னேறினார்.
வெற்றி குறித்துப் பேசிய யூகி பாம்ப்ரி, “களிமண் ஆடுகளத்தில் சிறப்புமிக்க வீரரான டீர் என்னை கடுமையாக சோதித்துவிட்டார். களிமண் ஆடுகளத்தில் விளையாடுவது முற்றிலும் வித்தியாசமானது.
முதல் செட்டில் டீர் சிறப்பாக ஆடினார். அவரைப் போன்று அதிவேக ஷாட்களை ஆட முடியவில்லை. அதனால் எனது சர்வீஸை தக்கவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினேன்” என்றார். யூகி பாம்ப்ரி தனது காலிறுதியில் ஸ்பெயினின் அட்ரியானை சந்திக்கிறார்.
ஆனால் மற்றொரு இந்தியரான சாகேத் மைனேனி 64 நிமிடங்களில் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் பிரிட்டனைச் சேர்ந்த தகுதி நிலை வீரரான லியூக் பாம்ப்ரிட்ஜை தோற்கடித்தார்.
இந்த ஆட்டம் முழுவதிலும் ஒரேயொரு ‘பிரேக் பாயிண்டை’ மட்டுமே சாகேத் பெற்றார். ஆனால் அதை மீட்ட சாகேத், எதிராளியின் சர்வீஸை மூன்று முறை முறியடித்தார். சாகேத் தனது காலிறுதியில் பிரிட்டன் வீரர் பிரைன் கிளெய்னை சந்திக்கிறார்.