

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தி, ஐபிஎல் சீசன் 8 சாம்பியன் ஆனது மும்பை இந்தியன்ஸ் அணி.
கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த இறுதிப் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் 2-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இப்போட்டியில், 203 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய சென்னை அணியை ஆரம்பம் முதலே மும்பை பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தினர்.
5-வது ஓவரில் மைக் ஹஸ்ஸி வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆட வந்த ரெய்னாவும் அதிரடியை விடுத்து நிதான ஆட்டத்தையே காட்டினார். 10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 67 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. மறுமுனையில் ஆடிவந்த ஸ்மித் 46 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
12-வது ஓவரில் ஸ்மித், 14-வது ஓவரில் ரெய்னா, 15-ல் பிராவோ, 16-ல் தோனி என ஓவருக்கு ஒருவர் என்ற ரீதியில் 19-வது ஓவர் வரை அடுத்தடுத்து வீரர்கள் பெவிலியன் திரும்ப சென்னையின் தோல்வி உறுதியானது.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 161 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-வது முறையாக ஐபில் சாம்பியன் ஆனது.
இதுவரை மூன்று முறை சென்னையும் மும்பையும் ஐபிஎல் இறுதியில் மோதியுள்ளன. இதில் சென்னை ஒரு முறையும் (2010), மும்பை இரண்டு முறையும் (2013, 2015) வெற்றி பெற்றுள்ளன.
முன்னதாக டாஸில் வென்ற சென்னை, மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தது. முதல் ஓவரிலேயே பார்த்திவ் படேல் ரன் அவுட் ஆனாலும் அடுத்து களமிறங்கிய ரோஹித் சர்மா 2-வது ஓவரில் 16 ரன்கள் குவித்து அதிரடியை துவக்கி வைத்தார். தொடர்ந்து சிம்மன்ஸும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை தொடங்கினார்.
சென்னையின் பந்துவீச்சை ரோஹித் சர்மா - சிம்மன்ஸ் இணை அடித்து நொறுக்க 11-வது ஓவரிலேயே 100 ரன்களை மும்பை கடந்தது. 35 பந்துகளில் சிம்மன்ஸ் அரை சதம் தொட்டார், ரோஹித் சர்மா 25 பந்துகளிலேயே அரை சதம் எடுத்தார். ரோஹித் சர்மாவும் சிம்மன்ஸும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும் தொடர்ந்து ஆட வந்தவர்கள் வேகமாகவே ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்தது 202 ரன்களை குவித்தது. ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆட்டக்களத்தில் புற்கள் ஆங்காங்கே காணப்பட்டதால், முதலில் பவுலிங் தேர்வு செய்வதே சரியானது என்ற சென்னை கேப்டன் தோனியின் கணிப்பு கைகொடுக்கவில்லை. அதேபோல், நேஹ்ராவின் பந்துவீச்சு எடுபடாமல் போனதும் பெரும் பின்னடவை ஏற்படுத்தியது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அசத்தலான பேட்டிங், அந்த அணிக்கு வெற்றியை உறுதி செய்தது. சென்னை சூப்பர் கிங்ஸ்சின் உத்வேகமற்ற ஆட்டம் தோல்விக்கு வழிவகுத்தது. பவுலிங்கிலும் உத்வேகம் இல்லை; பேட்டிங்கிலும் இலக்கை எட்டும் நோக்கம் இல்லை என்பதை உணர முடிந்தது.