Published : 09 May 2015 08:52 PM
Last Updated : 09 May 2015 08:52 PM

கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தி கொல்கத்தா முதலிடம்

கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.

முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய கொல்கத்தா அணி 1 பந்து மீதமிருக்கையில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது.

18-வது ஓவர் முடிவில் 171/7 என்ற நிலையில் பியூஷ் சாவ்லா, பிராட் ஹாக் களத்தில் இருக்க 2 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவுகரியமான நிலையில் இருந்தது கொல்கத்தா.

19-வது ஓவரை சந்தீப் சர்மா மிகச்சிறப்பாக வீசி 5 ரன்களையே விட்டுக் கொடுத்தார்., இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் என்று சற்றே பரபரப்பு கூடியது.

20-வது ஓவர் முதல் பந்தில் பிராட் ஹாக் 1 ரன் எடுத்தார். அனுரீத் சிங் வீசிய இந்த கடைசி ஓவரின் 2-வது பந்தில் ஹாக் ரன் அவுட் ஆனார். அனுரீத் சிங்கே பந்தை எடுத்து ரன்னர் முனையில் அடித்தார்.

3-வது பந்து லெந்த்தில் விழ பியூஷ் சாவ்லா மிட்விக்கெட்டில் மிகப்பெரிய சிக்சர் அடித்து ஸ்கோரை சமன் செய்தார். ஆனால் அடுத்த பந்தே அனுரீத் சிங் வீசிய லெக் திசை பந்தைத் தொட்டு சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார் சாவ்லா.

ஆட்டம் சூப்பர் ஓவருக்குப் போகலாம் என்ற நிலையில் 5-வது பந்தில் லெக் பை ரன்னில் வெற்றி ரன் வந்தது.

அனுரீத் சிங் இன்று மிக மோசமாக வீசி 3.5 ஓவர்களில் 56 ரன்களை விட்டுக் கொடுத்தார். குறிப்பாக 5 ஓவர்களில் 48 ரன்கள் தேவை என்ற நிலையில் 16-வது ஓவரை வீசிய அனுரீத் சிங், ரவுண்ட் த விக்கெட்டில் வீசி புல்டாஸாக போட 2 சிக்சர்கள் 1 பவுண்டரி அடித்தார் ரசல், அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தது.

ஓவர் த விக்கெட்டில் வீசி யார்க்கர் விழாவிட்டால் கூட புல்டாஸ் பந்துகளில் பெரிய ஷாட்களை ஆடுவது கடினம், ஆனால் ரவுண்ட் த விக்கெட்டில் யார்க்கர் வீசுவதற்கெல்லாம் வாசிம் அக்ரம் போன்ற திறமை வேண்டும், வேகம் வேண்டும், இரண்டும் இல்லாத அனுரீத் சிங் ரவுண்ட் த விக்கெட்டில் வீசி வாரி வழங்கினார்.

ஆந்த்ரே ரசல் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 51 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் சஹாவின் அருமையான ரிப்ளெக்ஸ் கேட்சிற்கு அவுட் ஆனார்.

முன்னதாக யூசுப் பத்தான் அக்சர் படேலை 14-வது ஓவரில் இரண்டு மிகப்பெரிய சிக்சர்களை அடித்தார். அவர் 19 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததும் கொல்கத்தா வெற்றியில் பங்களிப்பு செய்தது.

முன்னதாக உத்தப்பா (17), கவுதம் கம்பீர் (24), மணீஷ் பாண்டே (22), சூரியகுமார் யாதவ் (9) ஆகியோர் ஆட்டமிழந்தாலும் 10.5 ஓவர்களில் ஸ்கோர் 83 ரன்கள் என்று இருந்தது.

அதன் பிறகே பதான், ரசல் ஜோடி ஆட்டத்தை திருப்பினர். குர்கீரத் சிங் மட்டுமே 3 ஓவர்களில் 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிக்கனம் காட்டினார். மேக்ஸ்வெல் 1 ஓவர் வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்து பாண்டே விக்கெட்டை வீழ்த்தினார். ஆனால் அவரை மீண்டும் கொண்டு வரவில்லை என்பதன் மர்மம் ஜார்ஜ் பெய்லியையே சாரும்.

இன்று பந்து வீச்சில் 4 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்த ரசல் பேட்டிங்கில் ஈடுகட்டி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

கொல்கத்தாவின் மட்டமான பீல்டிங்:

கொல்கத்தா பீல்டிங்கும், பவுலிங்கும் (சுனில் நரைன் நீங்கலாக) படு மோசமாக அமைந்தது. குறைந்தது 5 கேட்ச்கள் விடப்பட்டன.

முதலில் முரளி விஜய்க்கு கம்பீர் 2-வது ஓவரில் எக்ஸ்ட்ரா கவரில் சற்றே கடினமான வாய்ப்பை நழுவ விட்டார்.

அதனால் அதற்கு அடுத்த ஓவரை உமேஷ் யாதவ் வீச, முரளி விஜய்யின் மட்டைக்கு ஆவேசம் பிடித்தது. முதலில் லெக் திசை பவுண்டரி. பிறகு ஒரு ஷார்ட் பிட்ச் வைடு பந்தை கவர் திசையில் மாட்டடி அடித்து சிக்சர் விளாசினார். பிறகு ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரி, மீண்டும் மிட் விக்கெட், மிட் ஆன் இடையே ஒரு அற்புதமான பவுண்டரி என்று அந்த ஓவரில் 18 ரன்களை விளாசித்தள்ளினார் விஜய், ஆனால் அத்தனையும் முறையான கிரிக்கேட் ஷாட்கள்.

4-வது ஓவரில் நரைன் வீச வர, விஜய்க்கு ஸ்கொயர் லெக்கில் பிராட் ஹாக் ஒரு வாய்ப்பை நழுவ விட்டார்.

மீண்டும் 6-வது ஓவரில் அதே நரைனுக்கு, ஷார்ட் பைன் லெக் திசையில் முரளி விஜய் கொடுத்த கேட்சை உமேஷ் யாதவ் கோட்டை விட்டார். ஆனால் அதே ஓவரில் விஜய் 28 ரன்களில் அவுட் ஆனார்.

மனன் வோரா தனது பார்முக்காக தேடிக் கொண்டிருக்கும் போது 19 ரன்களில் அவருக்கு கீப்பர் உத்தப்பா வாய்ப்பு ஒன்றை நழுவ விட்டார். பாதிக்கபப்ட்ட பவுலர் ரசல்.

அதே ஓவரில் வோரா ஒரு சிக்சர் அடிக்க, மீண்டும் கடைசி பந்து லீடிங் எட்ஜ் எடுக்க மிட் ஆனில் யூசுப் பத்தான் மந்தமாக வினையாற்றி மற்றுமொரு வாய்ப்பை கோட்டை விட்டார். ஒரே ஓவரில் இரண்டு கேட்ச் வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன. வோரா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் இறங்கி பிராட் ஹாகை ஒரே ஓவரில் 2 சிக்ஸ் 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசினார். 22 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர் அடித்த மேக்ஸ்வெல் 43 ரன்களில் நரைன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் 33 ரன்கள் எடுத்த சஹாவையும் நரேன் வீழ்த்தி 4 விக்கெட்டுகளை 19 ரன்களுக்கு கைப்பற்றினார்.

கடைசி ஓவரில் டேவிட் மில்லர், ஆந்த்ரே ரசலை 2 சிக்ஸ், 2 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து 11 பந்துகளில் 27 ரன்களுடன் நாட் அவுட்டாக திகழ்ந்தார்.

கிங்ஸ் லெவன் 183 ரன்கள் எடுத்தது. பிற்பாடு தனது மோசமான பந்து வீச்சினால் தோல்வி தழுவியது கிங்ஸ் லெவன்.

இந்த வெற்றியின் மூலம் 12 போட்டிகளில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 15 புள்ளிகள் பெற்று சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது கம்பீர் தலைமை கொல்கத்தா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x