

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜொனாதன் டிராட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 பூஜ்ஜியங்களுடன் 72 ரன்களை மட்டுமே டிராட் எடுத்தார். இதனால் அவர் கடும் ஏமாற்றமடைந்தார்.
பொதுவாக 3-ம் நிலையில் களமிறங்கி இங்கிலாந்துக்கு மிகப்பெரிய டெஸ்ட் இன்னிங்ஸ்களை ஆடிக் கொடுத்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வீரரான ஜொனாதன் டிராட், ஆஷஸ் தொடரின் போது டேவிட் வார்னரின் முதிர்ச்சியற்ற மோசமான விமர்சனத்தினால் மனமுடைந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதன் பிறகு தற்போது மேற்கிந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இவர் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார்.
“இது ஒரு கடினமான முடிவே. ஆனால் இங்கிலாந்துக்கு விளையாடும் அளவுக்கு தேவைப்படும் அந்த உயர்தர கிரிக்கெட் ஆட்டம் என்னிடம் இல்லை என்றே கருதுகிறேன்.
எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து சர்வதேச கிரிக்கெட்டிற்கு அழைத்த இங்கிலாந்து கிரிக்கெட் எனக்கு செய்த உயர்ந்தபட்ச மரியாதையாக கருதுகிறேன். ஆனால் இது பயனளிக்கவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இங்கிலாந்துக்காக என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கிலாந்து வீரர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்றார் டிராட்.
டிராட்டின் கிரிக்கெட் வாழ்க்கை:
ஆகஸ்ட் 2009-ம் ஆண்டு இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரை வென்ற ஓவல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதம் கண்டார் ஜொனாதன் டிராட்.
லார்ட்ஸ் மைதானத்தில் வங்கதேசத்துக்கு எதிராக 8 மணி நேரம் கிரீஸில் நின்று 226 ரன்களை எடுத்தார்.
2010 ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் மைதானத்தில் முக்கியமான 135 ரன்களை எடுத்தார்.
பிறகு அதே தொடரில் மெல்போர்னில் 168 ரன்களை எடுத்தார். இந்த இன்னிங்ஸ் இங்கிலாந்துக்கு இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுத் தந்தது.
மார்ச் 2012-இல் கால்லே மைதானத்தில் இலங்கையின் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான 112 ரன்கள்.
டிசம்பர் 2012, நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக 2வது இன்னிங்ஸில் சதம் எடுத்தார். இதனால் அந்த டெஸ்ட் டிரா ஆக, இந்தியாவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நீண்ட இடைவேளைக்குப் பிறகு வென்றது.
அதன் பிறகு 2013 ஆஷஸ் தொடரில் பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் மிட்செல் ஜான்சனின் பொறிபறக்கும் பவுன்சருக்கு இருமுறை அவுட் ஆனார்.
இங்கிலாந்துக்காக மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடிய டிராட் 3,835 ரன்களை 44.08 என்ற சராசரியில் எடுத்துள்ளார் டிராட். 9 சதங்கள் 19 அரைசதங்கள்.
68 ஒருநாள் போட்டிகளில் 2,819 ரன்களை 51.25 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் 22 அரைசதங்கள் அடங்கும்.
தொடர்ந்து வார்விக்ஷயர் கவுண்ட்டி அணிக்கு விளையாடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.