

பல தலைமுறைகளுக்கான கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் மறைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் மேதை ரிச்சி பெனோவின் துல்லியமான, கச்சிதமான வர்ணனையிலிருந்து வளர்ந்தவர்களே.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னரும், சிறந்த வர்ணனையாளருமான ரிச்சி பெனோ சிட்னியில் காலமானார். | விரிவான செய்திக்கு ->ஆஸி.யின் முன்னாள் அசத்தல் ஆட்டக்காரரும் கிரிக்கெட் வர்ணனை மன்னருமான ரிச்சி பெனோ மறைவு |
கிரிக்கெட் ஆட்ட வர்ணனையை உச்சத்துக்குக் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவர் ரிச்சி பெனோ. கச்சிதமான வார்த்தைகளை மிகவும் அழகாகப் பயன்படுத்துவார் ரிச்சி பெனோ. விவ் ரிச்சர்ட்ஸ் அதிரடி ஆட்டம் ஆடும் போதெல்லாம் இவரது வர்ணனையைக் கேட்பது ஒரு அரிய அனுபவம்.
அவரது வர்ணனையில் மறக்க முடியாதவற்றில் சில:
"பிராட் மேன் மிகச்சிறந்த பேட்ஸ்மென், அவருக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர்தான்" (ரிச்சி பெனோ, டான் பிராட்மேன் முதல் அனைத்து சிறந்த வீரர்களின் ஆட்டங்களை நேரில் கண்டவர்)
“கிளென் மெக்ரா 2 ரன்களில் அவுட் ஆக்கப்பட்டார். அவர் சதம் எடுக்க 98 ரன்கள் இருக்கும் நிலையில் துரதிர்ஷ்டவசமாக வீழ்த்தப்பட்டார்.”
ஒரு முறை மைதானத்தில் ஆட்டத்தின் நடுவே ரசிகர் ஒருவர் இறங்கி நிர்வாணமாக ஓடினார், வீரர்கள் அவரைக் கண்டு ஓடினர், அப்போது ரிச்சி பெனோ, “தடகளப் போட்டிக்காக நல்லதொரு இடையூறு” என்றார்.
பேட்ஸ்மென் ஒருவர் பவுண்டரி விளாசிய பிறகு, "டிவி ஸ்லோ மோஷன் ரீப்ளே அந்தப் பந்து எவ்வளவு வேகமாக பவுண்டரிக்குச் சென்றது என்பதை காண்பிக்கவில்லை.” என்றார்.
நமது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை அவருக்கு மிகவும் பிடிக்கும். அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் பற்றி அவர் ஒரு முறை கூறும்போது, “குனிந்து கால்களைப் பரப்பி நிற்கிறார், அருமையான கண்கள்... மிக மிக ஆபத்தானவர்..” (crouching Stance, very good eyes... and very very dangerous..)என்றார்.
1992 முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சச்சின் டெண்டுல்கர், மே.இ.தீவுகளின் மால்கம் மார்ஷல் பந்தை எதிர்கொண்டார் அப்போது, “அது ஒரு விரயமான ஷார்ட் பிட்ச் பந்து, சச்சின் கால்களின் சுறுசுறுப்புக்கு முன்னால் அது ஒன்றும் செய்ய முடியாமல் மிட்விக்கெட் பவுண்டரியை மோதியது.. என்றார். அடுத்த பந்தும் அதே திசையில் பவுண்டரி... அப்போது ரிச்சி பெனோ வர்ணிக்கவில்லை மாறாக “அண்ட் எகெய்ன்” என்று ரத்தினச் சுருக்கமாக நிறுத்திக் கொண்டார்.
“கேப்டன்சி என்பது 90% திறமை, 10% அதிர்ஷ்டம், ஆனால் இந்த 10% இல்லாமல் அதனை முயற்சி செய்ய வேண்டாம்.
1981 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற்ற போது கடைசி பந்தை கேப்டன் கிரெக் சாப்பலின் ஆணையின் படி அவரது தம்பி டிரவர் சாப்பல் ‘அண்டர் ஆர்ம்’ த்ரோ செய்த இழிவு பற்றி ரிச்சி பெனோ: கேப்டனிடமிருந்து மிகவும் இழிவான ஒரு செயல்பாடு. இது நடக்க இனி அனுமதிக்கவே கூடாது. கிரிக்கெட் களத்தில் இவ்வளவு மோசமான காரியத்தைச் செய்த ஒரு நிகழ்வு வேறு எதுவும் இல்லை” என்றார்.
"வர்ணனையில் முக்கியமானது என்னவெனில் வார்த்தைகளின் சிக்கனம், திரையில் தெரிவதற்கு சற்று கூடுதலாக கூற வேண்டும், பார்வையாளர்கள் பார்ப்பதை அப்படியே கூறி அவர்களை இன்சல்ட் செய்யக் கூடாது"
1981 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஆல் ரவுண்ட்ர் இயன் போத்தம் ஒரு பயங்கரமான ஷாட் அடித்தார் அப்போது, “அந்தப் பந்தை தேட வேண்டாம். துரத்திச் செல்வது வியர்த்தம். அது நேராக திண்பண்டங்கள் விற்கும் கடைக்குச் சென்று திரும்பி வரும்” என்றார்.
"என்னுடைய முடி அளவுக்கு அதிகமாக நீளமாக வளரும் போது, நான் என் மனைவியின் சிகை அலங்கார நிபுணரிடமே செல்வேன், அப்போதெல்லாம் அதற்கு என் மனைவிதான் கட்டணம் செலுத்துவது வழக்கம்."
இந்திய அணியின் தற்போதைய தேர்வுக்குழு தலைவரும் முன்னாள் அதிரடி வீரருமான சந்தீப் பாட்டீல் அடிலெய்டில் 174 ரன்களை விளாசினார். அப்போது அவர் பற்றி கூறிய ரிச்சி பெனோ, “அவரது அசாதாரண கண்கள் நல்ல பந்துகளையும் மோசமானதாக்கி விடும்” என்றார்.
ஜஸ்டின் லாங்கர் ஒரு முறை பயங்கரமான புல் ஷாட் ஒன்றை ஆடி சிக்ஸ் அடித்த போது, “அவருக்கு இந்த ஷாட் சரியாக மட்டையில் சிக்கவில்லை, ஒழுங்காக மாட்டியிருந்தால் அது சிக்சர் அல்ல ‘9’ ரன்களுக்குச் சென்றிருக்கும்” என்றார்.
மைக் கேட்டிங்குக்கு ஷேன் வார்ன் ‘இந்த நூற்றாண்டின் சிறந்த பந்தை’ வீசி பவுல்டு ஆக்கிய போது, வர்ணனையில் இருந்த ரிச்சி, “கேட்டிங்குக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன ஆனது என்று தெரியவில்லை, நடுவரிடம் கேட்கிறார்.. இன்னமுமே அவருக்கு பந்து என்ன ஆனது என்று புரியவில்லை” என்றார்.