

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. கடைசி நேரத்தில் மும்பையின் ஹர்பஜன் சிங் ஆடிய அதிரடி ஆட்டமும் வீணானது.
178 ரன்கள் இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் 14 ஓவர்கள் வரை மிக மோசமாக இருந்தது. முதல் ஓவரின் 2-வது பந்திலேயே ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, தாரே, ஃபின்ச், கோரே ஆண்டர்சன் என அனைவரும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 14 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த மும்பை டி20 போட்டியைத் தான் விளையாடுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து மிக நிதானமாக ரன் சேர்தது.
15-வது ஓவரில் களத்திலிருந்த ஹர்பஜன் சிங் - சுசித் ஜோடி திடீரென அதிரடி ஆட்டத்தை ஆடத் துவங்கினர். 15-வது ஓவரில் 19 ரன்கள் குவித்த இந்த இணை, தொடர்ந்து சிக்ஸர், பவுண்டரி என பஞ்சாப் பந்துவீச்சை விளாசியது. 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் ஹர்பஜன் சிங் அரை சதம் கடந்தார். இவர்களது அதிரடியால் வெற்றி இலக்கின் அருகே மும்பை அணி சென்றது.
கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவையாயிருக்க ஒரு பவுண்டரி, சிக்ஸர் உட்பட 11 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. ஹர்பஜன் 64 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சுசித் 21 பந்துகளில் 34 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றது. ஆட்டநாயகனாக பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பஞ்சாபை பேட் செய்ய அழைத்தார். பஞ்சாபின் தொடக்க வீரர்கள் வீரேந்திர சேவக் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்கம் முதலே அதிரடி காட்டினர்.
சேவக்கின் ஆட்டத்தில் அனல் பறந்தது. வினய் குமார் வீசிய 3-வது ஓவரில், 4,6,4 என தொடர்ந்து விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். மலிங்காவின் ஓவரில் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசினார். 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்த அவரை ஹர்பஜன் சிங் வெளியேற்றினார்.
முரளி விஜய் வழக்க மான பாணியில் அடித்து விளையாடி னார். மேக்ஸ்வெல்லை சுசித் வீழ்த்தினார். சுசித்துக்கு மேக்ஸ் வெல் முதலாவது ஐபிஎல் விக்கெட் ஆவார். மேக்ஸ்வெல் 4 பந்துகளில் 6 ரன்கள் எடுத்தார்.
அடுத்து மில்லரும் விஜயும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத் திருந்த விஜயை ஹர்பஜன் பெவிலியன் அனுப்பினார். பஞ்சாப் அணி 10 ஓவர்களில் 87 ரன்கள் எடுத்தது.
பின்னர் பெய்லியும் மில்லரும் ஜோடி சேர்ந்தனர். 23 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த மில்லர், மலிங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிஷி தவண் 6 ரன்களில் வெளியேறினார். அதன்பின் ஆட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்ட பஞ்சாப் கேப்டன் பெய்லி அதிரடியாக ஆடினார். அவர் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. ஜான்சன் 3 ரன்கள், பெய்லி 32 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மும்பை தரப்பில் ஹர்பஜன், மலிங்கா தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.