

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்பிய இங்கிலாந்து வீரர் ஜானதன் டிராட் மே.இ.தீவுகளுக்கு எதிராக முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
ஆஷஸ் தொடரின் போது ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் இவரது ஆட்டத்தைப் பற்றி எகத்தாளமாகக் கருத்துக்கூற அந்தத் தொடரிலிருந்து மனத்தாங்கலுடன் பாதியிலேயே இங்கிலாந்து திரும்பினார் டிராட்.
இந்நிலையில் மோசமான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு இன்று ஆண்டிகுவாவில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டிராட் தனது வழக்கமான 3-ம் நிலையில் இல்லாமல் அலிஸ்டர் குக்குடன் தொடக்கத்தில் களமிறங்கினார்.
ஜெரோம் டெய்லர் வீசிய முதல் ஓவரில் குக்தான் முதல் பந்தை எதிர்கொண்டார். 2-வது பந்தில் குக் ஒரு ரன் எடுக்க, டிராட் பேட்டிங் முனைக்கு வந்தார். முதல் பந்தே யார்க்கர் லெந்த் பந்து லெக் ஸ்டம்பில் விழுந்தது. ஸ்டம்புக்கு அருகில் சென்றது.
4-வது பந்தை பேட்டில் வாங்கினார். ரன் இல்லை. 5-வது பந்து ஆஃப் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி சற்றே லேட் ஸ்விங் ஆனது, கொஞ்சம் நேர் ஆனது, டிராட் மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் டேரன் பிராவோவிடம் கேட்ச் ஆனது. ரன் எடுக்காமல் அவுட் ஆனார் டிராட்.
16 மாதங்களுக்குப் பிறகு களமிறங்கி 0-வில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார் டிராட்.
அலிஸ்டர் குக், கிமார் ரோச் பந்தில் பவுல்டு ஆனார். பேட் செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் சற்று முன் வரை 16 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. பேலன்ஸ், இயன் பெல் ஆடி வருகின்றனர்.