

அமெரிக்காவில் நடைபெற்ற மியாமி ஓபன் டென்னிஸ், மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் சானியா சர்வதேச அளவில் 25-வது இரட்டையர் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவிலுள்ள மியாமி நகரில் இப்போட்டி நடைபெற்றது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் முதல்நிலையில் உள்ள சானியா ஜோடி, 2-வது நிலையில் உள்ள ரஷ்யாவின் எகடெரினா மகரனோவா எலினா வெஸ்னினா ஜோடியை இறுதி ஆட்டத்தில் எதிர்கொண்டது.
இப்போட்டியில் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக ரஷ்ய இணையை வீழ்த்திய சானியா - மார்ட்டினா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. முதலில் 2-5 என்ற கணக்கில் சானியா ஜோடி பின்தங்கியது. எனினும் சிறிதும் விட்டுக் கொடுக்காமல் உத்வேகத்துடன் விளையாடிய சானியா மார்ட்டினா ஆகியோர் ரஷ்ய ஜோடியை திணறடித்தனர்.
இதன் மூலம் 7-5 என்று முதல் செட்டை சானியா ஜோடி கைப்பற்றியது. 2-வது செட்டில் சானியா ஜோடி தொடக்கத்தில் இருந்தே தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியது. இதனால் அந்த செட் 6-1 என்ற கணக்கில் மிக எளிதாக வசமானது. இதன் மூலம் சாம்பியன் பட்டத்தையும் சானியா ஜோடி வென்றது.
இந்த வெற்றி குறித்து கருத்துத் தெரிவித்த சானியா, ஆட்டம் முழுவதுமே இருவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும், போராட்ட மனப்பான்மையுடனும் இருந்தோம். அதற்கு உரிய பலன் கிடைத்தது என்றார்.
இதுவரை மேற்கொண்ட பயிற்சிகளும், போட்டியின்போது சானியாவின் தந்தை இம்ரான் அளித்த ஆலோசனைகளும் வெற்றி பெற உதவின என்று மார்ட்டினா ஹிங்கிஸ் கூறினார்.
இரு வாரங்களுக்கு முன் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் போட்டியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
ஜோகோவிச் சாம்பியன்
மியாமி ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் 5-வது முறையாக சாம்பியனாகியுள்ளார்.
இறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை அவர் எதிர்கொண்டார். 2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற இப்போட்டியில், 7-6 (7/3), 4-6, 6-0 என்ற கோல் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார்.
முதல் செட்டில் இருவரும் கடுமையாக மோதியதால் அது டை-பிரேக்கருக்கு சென்றது. எனினும் முடிவில் ஜோகோவிச் 7-6(7-3) என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
2-வது செட்டில் முர்ரே சிறப்பாக விளையாடினார். இதனால் ஆட்டத்தில் ஜோகோவிச் பிடி தளர்ந்தது. முர்ரே 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3-வது செட்டில் சுதாரித்து கொண்ட ஜோகோவிச் அதிரடியாக விளை யாடி முர்ரேவை திணறடித்தார். இந்த செட் 6-0 என்ற கணக்கில் ஜோகோவிச் வசமானது, போட்டி யிலும் அவர் வென்றார். இதனால் ஜோகோவிச் இப்போட்டியில் 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.