Published : 02 May 2014 02:57 PM
Last Updated : 02 May 2014 02:57 PM

சாம்பியன்ஸ் லீக்: இறுதிச்சுற்றில் அட்லெடிகோ

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த அட்லெடிகோ மாட்ரிட் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

அட்லெடிகோ மாட்ரிட்-செல்சீ அணிகளுக்கு இடையிலான அரையிறுதியின் முதல் சுற்று கோலின்றி டிராவில் முடிந்த நிலையில், லண்டனில் புதன்கிழமை நடைபெற்ற அரையிறுதியின் 2-வது சுற்றில் 3-1 என்ற கோல் கணக்கில் செல்சீ அணியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றை உறுதி செய்தது அட்லெடிகோ.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் செல்சீ அணியின் பெர்னாண்டோ டோரஸ் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆனால் இந்த முன்னிலை 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. 44-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் இடது புறத்தில் இருந்து அட்லெடிகோ அணியின் அட்ரியான் லோபஸ் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணிக்கு பெனால்டி கிக் வாய்ப்பு கிடைக்கவே, அதில் அதிரடியாக கோலடித்தார் டீகோ கோஸ்டா. இதனால் அந்த அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு 72-வது நிமிடத்தில் அட்லெடிகோ அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைக்க, அதை சரியாகப் பயன்படுத்திய ஆர்டா டுரான் கோலடித்தார். இறுதியில் அட்லெடிகோ 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

40 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ள அட்லெடிகோ மாட்ரிட் அணி, அடுத்ததாக தனது பரமவைரியான ரியல் மாட்ரிட் அணியைச் சந்திக்கிறது. இந்த இறுதி ஆட்டம் வரும் 24-ம் தேதி போர்ச்சுக்கல் தலைநகர் லிஸ்பனில் நடைபெறவுள்ளது. ஐரோப்பிய சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் ஒரே நகரைச் சேர்ந்த (மாட்ரிட்) இரு அணிகள் மோதவுள்ளது இதுவே முதல்முறையாகும்.

ஸ்பெயின் லீக்கில் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை நெருங்கியுள்ள அட்லெடிகோ அணிக்கு இந்த முறை இரட்டைச் சாம்பியன் பட்டம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லெடிகோ அணியின் பயிற்சியாளர் சைமன் கூறுகையில், “மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கி றேன். செல்சீ அணி முதல் கோலை அடித்ததும் உடனடியாக அவர்களுக்கு பதிலடி கொடுத்ததை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இதேபோல் 2-வது பாதி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே நாங்கள் அபாரமாக ஆடினோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x