

சென்னையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி 12 புள்ளிகளுடன் ராஜஸ்தானை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தது.
வலுவான அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸை 134 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகே கொல்கத்தா தோற்கும் வேலைக்கே அங்கு இடமில்லை. அதுவும் 5 ஓவர்களில் 52/1 என்ற நிலையிலிருந்து மோசமான ஷாட் தேர்வு கொல்கத்தாவை தோல்விக்கு இட்டுச் சென்றது. சென்னை அணியின் பீல்டிங் மற்றும் பவுலிங்கும் சிறப்பாக அமைய தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து 2 ரன்களில் தோல்வி கண்டது.
இந்த வெற்றி குறித்து தோனி கூறும்போது, “இது ஒரு அருமையான வெற்றி. இந்தப் பிட்சில் எது வெற்றிக்கான ஸ்கோர் என்பதை சுலபத்தில் நிர்ணயிக்க முடியாது. அதாவது நன்றாக பேட் செய்தால் 160 ரன்களை எடுக்கலாம், நல்ல பவுலிங் செய்தால் 125 ரன்களை வைத்துக் கொண்டு எதிரணியினரை வெற்றி பெற விடாமல் தடுக்கலாம் என்ற வகையிலான பிட்ச் இது. ஆட்டம் 6-வது ஓவரில் மாற்றமடைந்தது.
பேட்டிங்கில் சோடை போனாலும், பவுலிங், மற்றும் பீல்டிங் மூலம் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தோம். சில வேளைகளில் ரெய்னா பந்து வீச்சிலும் எங்களுக்காக நன்றாக வீசினார்.
அவர் பந்தின் தையலை நன்றாகப் பயன்படுத்துகிறார், பேட்ஸ்மென்கள் தவறு செய்தால் விக்கெட்டுகளைக் கைப்பற்றக் கூடியவர் ரெய்னா. நாங்கள் 2 கேட்ச்களை கோட்டை விட்டோம், ஆனால் மொத்தமாக பீல்டிங் அருமை. ரஸலின் ரன் அவுட் எங்களுக்கு மிக முக்கியமாக அமைந்த்து.
கடைசியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சோபிக்காமல் போனால் என்ன செய்வதென்று ஜடேஜாவுக்கு ஒரு ஓவரை மீதம் வைத்திருந்தேன். அவரது 3 ஓவர்கள் மிக முக்கியமாக அமைந்தது. பிரெண்டம் மெக்கல்லம், பீல்டிங்கில் பொறிபறந்தது. நடு ஓவர்களில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தோம் இதனால் அவர்களால் ஸ்ட்ரைக்கை ஒருவரிடமிருந்து ஒருவருக்கு எளிதாகக் கொண்டு வர முடியவில்லை.
சில போட்டிகளில் தோல்வி ஏற்பட்டாலும், நன்றாக விளையாடுவது அவசியம். அதாவது 80% ஆட்டத்திறனை வெளிப்படுத்த வேண்டும், இது ஒரு அருமையான வெற்றி” என்றார் கேப்டன் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது தங்கள் மண்ணில் 9 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது.
இலக்கை துரத்திய கொல்கத்தா அணியின் மோசமான பேட்டிங்
கோல்கத்தா இலக்கை துரத்தும் போது ராபின் உத்தப்பா மிக அருமையாக விளையாடினார். அவரது 16 பந்து 39 ரன்கள் கொல்கத்தாவுக்கு வெற்றியைப் பெற்று தந்திருக்கும். ஆனால் அஸ்வின், உத்தப்பா, மற்றும் மணீஷ் பாண்டே ஆகிய இருவரையும் வீழ்த்தினார். மணீஷ் பாண்டேயிற்கு தோனி ஒரு வாய்ப்பை ஏற்கெனவே கோட்டை விட்டிருந்தார். இதனை பாண்டே சரிவர பயன்படுத்திக் கொள்ளவில்லை.
ஜடேஜா, ரெய்னா பந்துவீசி 4 ஓவர்களில் 12 ரன்களையே விட்டுக் கொடுத்தனர். 13-வது ஓவரில் மோஹித் சர்மா வீச வந்தார். சூரியகுமார் யாதவுக்கு பிராவோ மிக அருமையான கேட்ச் ஒன்றை பிடித்து வெளியேற்றினார். 7-வது ஓவரில் அடிக்கப்பட்ட பவுண்டரிக்குப் பிறகு 19-வது ஓவரில்தான் பவுண்டரியே வந்தது.
டிவைன் பிராவோ, ஸ்பின்னர்களை விடவும் மெதுவாக வீசி விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். யூசுப் பத்தான் இறங்கும் போது 74 பந்துகளில் 67 ரன்கள் தேவை என்ற நிலை அவர் 18 பந்துகளை சாப்பிட்டு 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பிறகு 28 பந்துகளில் 44 ரன்கள் என்று ஆனது.
கொல்கத்தாவின் ஒரே நம்பிக்கை ஆந்த்ரே ரசல்தான். ஆனால் அவரை 2-வது ரன்னுக்கு அழைத்து டென் டஸ்சாதே தவறு செய்ய ரசல் ரன் அவுட் ஆனார். டென் டஸ்சாதே தன் விக்கெட்டை தியாகம் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் கூலாக இருந்தார். பிராவோவின் ஏறக்குறைய உருளும் ஸ்லோ பந்துகளும் ஆஷிஷ் நெஹ்ராவின் துல்லியமான யார்க்கர்களும் சென்னைக்கு வெற்றி தேடி தந்தன.
கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் பிராவோ வீசிய அருமையான பந்தினாலும் டஸ்சாதேயின் தாறுமாறான சுழற்றலாஉம் முதல் 3 பந்துகளில் ரன் எதுவும் வரவில்லை. பிறகு 4-வது பந்தில் சிக்ஸ், 5,6 வது பந்துகளில் பவுண்டரிகளை அடித்து 38 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். முதல் 3 பந்துகளில் ரன் இல்லாததால் கொல்கத்தா தோல்வி அடைந்தது. அஸ்வின் 2 ஓவர்கள் 5 ரன்கள் 2 விக்கெட். பிராவோ 22 ரன்களுக்கு 3 விக்கெட்.
பிராவோ ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். முன்னதாக சாவ்லா, ஹாக், ரஸல் ஆகியோரது பந்து வீச்சுக்கு சென்னை அணி கட்டுப்பட்டு 134 ரன்களையே எடுத்தது. டு பிளெஸ்ஸிஸ் அதிகபட்சமாக 29 ரன்களையும், ஸ்மித் 25 ரன்களையும், மெக்கல்லம் 19 ரன்களையும், எடுக்க ரெய்னா 17 ரன்னில் அவுட் ஆனார். தோனி மீண்டும் ஒரு சொதப்பல் ஆட்டம் ஆடி 6 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.