

2016-ம் ஆண்டு பிரேசில் நகரான ரியோ டி ஜெனிரியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அபூர்வி சந்தேலா தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளார்.
கொரியாவில் உள்ள சங்வோனில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் வெண்கலம் வென்றதனால் அபூர்வி 2016 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.
ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் ஏர் ரைபிள் பிரிவில் இறுதிக்குத் தகுதி பெற்ற அபூர்வி 8 வீராங்கனைகள் கொண்ட வலுவான பட்டியலில் 3-ம் இடம் பிடித்தார்.
இறுதிக்கு தகுதி பெறும் 8 வீராங்கனைகளில் டாப் 6 வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றனர்.
இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெறும் 2-வது வீராங்கனையானார் அபூர்வி. முன்னதாக ஜிது ராய் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜிது ராய் ஸ்பெயினில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் 50மீ ஃப்ரீ பிஸ்டல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் 2016 ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றார்.
அபூர்வி தகுதி பெற்றதற்கு இந்திய துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டுக் கூட்டமைப்பு வாழ்த்து தெரிவித்துள்ளது.