

சென்னையில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், கிங்ஸ் லெவன் பஞ்சாபும் மோதுகின்றன.
சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.
இரண்டு முறை கோப்பையை வென்ற அணியான சூப்பர் கிங்ஸ், இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்துள்ளது. அதிலும் சென்னையில் நடைபெற்ற இரு ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. அதனால் இன்றைய ஆட்டத்திலும் சூப்பர் கிங்ஸின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ச்சியாக 5 வெற்றிகளைப் பெற்ற ராஜஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதன் மூலம் பஞ்சாப் அணி புதிய உத்வேகம் பெற்றுள்ளது. ஷான் மார்ஷின் வருகை அந்த அணிக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதால் பஞ்சாப்பும் சிறப்பாக ஆடும் என எதிர்பார்க் கப்படுகிறது.
சமபலம் கொண்ட சூப்பர் கிங்ஸ்
சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சமபலம் கொண்டதாகத் திகழ்கிறது. தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டுவைன் ஸ்மித் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பிரென்டன் மெக்கல்லம், சன்ரைஸர்ஸுக்கு எதிராக சதமடித்த பிறகு பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனினும் அவர் களத்தில் நிற்கும் வரையில் எதிரணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.
மிடில் ஆர்டரில் சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, டுவைன் பிராவோ, கேப்டன் தோனி ஆகியோர் சூப்பர் கிங்ஸின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கின்றனர். கடந்த ஆட்டத்தில் 32 பந்துகளில் 62 ரன்கள் குவித்த ரெய்னா, இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ரன் சேர்ப்பார் என நம்பலாம்.
வேகப்பந்து வீச்சில் நட்சத்திர வீரர்கள் இல்லையென்றாலும், ஆசிஷ் நெஹ்ரா, ஈஸ்வர் பாண்டே, மோஹித் சர்மா கூட்டணி சிறப்பாகவே பந்துவீசி வருகிறது. இவர்களில் குறிப்பாக ஆசிஷ் நெஹ்ரா இதுவரை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெங்களூருக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நெஹ்ரா, பஞ்சாப் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணி சூப்பர் கிங்ஸின் நம்பிக்கையைப் பெற்ற கூட்டணியாக உள்ளது.
மிரட்டும் ஷான் மார்ஷ்
பஞ்சாப் அணி, சூப்பர் கிங்ஸை வீழ்த்துவதற்கு அந்த அணியின் தொடக்க வீரர்களான சேவாக்-முரளி விஜய் ஜோடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுப்பது அவசியம். முந்தைய சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடியவரான முரளி விஜய்க்கு, சென்னை மைதானம் நன்கு பழக்கப்பட்டது என்பதால் அவர் ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி கடந்த போட்டியில் காயம் காரணமாக விளையாடாததால் அவருக்குப் பதிலாக களமிறங்கிய ஷான் மார்ஷ் 40 பந்துகளில் 65 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோல் டேவிட் மில்லர் 30 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். எனவே இன்றைய ஆட்டத்தில் பெய்லி களமிறங்கும்பட்சத்தில் தொடர்ச்சியாக சொதப்பி வரும் மேக்ஸ்வெல் நீக்கப்பட வாய்ப்புள்ளது. வேகப்பந்து வீச்சில் மிட்செல் ஜான்சன், அனுரீத் சிங், சந்தீப் சர்மா கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் அக் ஷர் படேலையும் நம்பியுள்ளது பஞ்சாப்.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்
இதுவரை
இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் சூப்பர் கிங்ஸ் 8 முறையும், பஞ்சாப் 6 முறையும் வெற்றி கண்டுள்ளன. ஓர் ஆட்டம் டையில் முடிந்துள்ளது. கடந்த சீசனில் பஞ்சாப்புடன் மோதிய 3 ஆட்டங்களிலும் சூப்பர் கிங்ஸ் தோல்வி கண்டுள்ளது. அந்த 3 ஆட்டங்களிலுமே 200 ரன்களுக்கு மேல் குவித்தது பஞ்சாப்.
மும்பை-சன்ரைஸர்ஸ் மோதல்
மும்பையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தும் மோதுகின்றன. இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி, அதில் 5-ல் தோல்வி கண்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி தனது பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு இந்தப் போட்டியில் வெல்வது அவசியம்.
டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைஸர்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.