Last Updated : 07 Apr, 2015 10:00 AM

 

Published : 07 Apr 2015 10:00 AM
Last Updated : 07 Apr 2015 10:00 AM

ஒரே போட்டியில் 5 கோல்: 8 நிமிடத்தில் ஹாட்ரிக்; ரொனால்டோ சாதனை

லா லிகா கால்பந்து லீக் போட்டியில் குறைந்த நேரத்தில் (8 நிமிடத்தில்) ஹாட்ரிக் அடித்ததுடன், 5 கோல் களை அடித்து சாதனை படைத்தார் ரியல் மாட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி கிரனாடா சிஎப் அணியை எதிர்கொண்டது. இதிர் அதிரடியாக விளையாடிய ரியல் மாட்ரிட் 9-1 என்ற கோல் கணக்கில் சிறப்பான வெற்றி பெற்றது. அந்த அணியின் ரொனால்டோ 5 கோல் அடித்து அணியின் அபார வெற்றிக்கு உதவினார். மேலும் அவர் 8 நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார்.

இப்போட்டி தொடங்கிய 25-வது நிமிடத்தில் மாட்ரிட் அணி வீரர் கரேத் முதல் கோல் அடுத்தார். 30-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். தொடர்ந்து பந்தை தன் வசத்தில் வைத்திருந்த அவர் 36- வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார்.

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கிரனாடா அணி வீரர்களை திணறடித்த அவர் 38-வது நிமிடத்தில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். 30 முதல் 38 நிமிட நேரத்தில் அவர் தொடர்ந்து மூன்று கோல்களை அடித்து மாட்ரிட் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தினார்.

முதல் பாதியில் மாட்ரிட் அணி 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 2-வது பாதி நேரத்திலும் ரியல் மாட்ரிட் அணியின் தாக்குதல் ஆட்டம் தொடர்ந்தது. அந்த அணி வீரர் கரீம் பென்சிமா 52-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால் கிரனாடா அணி வீரர்கள் நிலை குலைந்தனர்.

அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 54-வது நிமிடத்தில் ரொனால்டோ மேலும் ஒரு கோல் அடித்தார். அடுத்து 2 நிமிடத்தில் பென்சிமா ஒரு கோல் அடித்தார். இதனால் மாட்ரிட் அணியின் கோல் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. பதில் கோல் அடிக்கும் கிரனாடா அணியின் கடும் முயற்சிக்கு 74-வது நிமிடத்தில் தான் பலன் கிடைத்தது. அப்போது கிரனாடா அணி வீரர் எபனேஸ் கெஸ்ட்ரோ தங்கள் அணிக்கான ஒரே ஒரு கோலை எடுத்தார்.

எனினும் மாட்ரிட் அணியின் தாக்குதல் தொடர்ந்தது. 83 நிமிடத்தில் மேலும் ஒரு கோல் கிடைத்தது. 89-வது நிமிடத்தில் ரொனால்டோ இப்போட்டில் தனது 5-வது கோலை அடித்தார். இறுதியில் 9-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது. ஒரே போட்டியில் ரொனால்டோ 5 கோல் அடிப்பது இதுவே முதல்முறை.

1943-ம் ஆண்டு ஸ்பெயின் கோப்பை கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியை 11 1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் வென்றது. இதுவே அந்த அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x