சச்சின் ஆடிய யார்க்‌ஷயர் அணிக்கு விளையாடுவதில் பெருமை: புஜாரா

சச்சின் ஆடிய யார்க்‌ஷயர் அணிக்கு விளையாடுவதில் பெருமை: புஜாரா
Updated on
1 min read

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் வீரர் செடேஷ்வர் புஜாரா, இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் அணியான யார்க்‌ஷயரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஏலம் எடுக்கப்படாதது பற்றி கவலையில்லை, தற்போது யார்க்‌ஷயர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்வதில் தற்போது கவனம் செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

"இப்போது இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. கிரிக்கெட் வாழ்வில் சில நேரம் நமக்கு சாதகமாக அமையாது. அதிலிருந்து வெளியே வர கடின உழைப்பு தேவை. எனது முன்னுரிமை தற்போது யார்க்‌ஷயர் அணிக்காக சிறப்பாக விளையாடுவதே. நான் அனைத்து தரப்பிலும் சிறந்து விளங்கவே பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக வளர்ச்சியடைந்து வருகிறேன். சில தொடர்கள் நமக்கு நல்லபடியாக அமையும் சில தொடர்களில் சோபிக்காமல் போகிறோம். ஆனால் அடிப்படை என்னவெனில் சோர்ந்து உட்காராமல் மனத் திட்பத்துடன் செயல்படுவது அவசியம்.

கடந்த முறை டெர்பிஷயர் அணிக்காக விளையாடினேன், இந்த முறை யார்க்‌ஷயர் ஒப்பந்தம் கிடைத்துள்ளது. இங்கிலாந்தின் பிட்ச், சூழலில் ஆடுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. பலதரப்பட்ட பிட்ச்களில் ஆடுவது ஒரு சிறந்த கற்றல் அனுபவமாகும்.

பேட்டிங்குக்கு கடினமான சூழ்நிலையில் நன்றாக விளையாடுவது என்பது ஒரு முழுமையான கிரிக்கெட் வீரனாக நம்மை வளர்த்தெடுக்கும்.

சச்சின் டெண்டுல்கர் ஆடிய கவுண்டி அணியான யார்க்‌ஷயர் அணிக்கு விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறேன்" என்றார் புஜாரா.

இங்கிலாந்தில் கடந்த முறை நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் 222 ரன்களையும் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் 201 ரன்களையும் எடுத்து சுமாராகவே ஆடினார். 4-வது டெஸ்ட் போட்டியில் புஜாரா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது அவர் பேட்டிங்கில் இந்தத் தொடர்களில் தோல்வியடைந்தார் என்று கூற முடியாது, ஏனெனில் அவர் 30 ரன்களையோ, 40 ரன்களையோ எடுத்தும் அல்லது தன்னம்பிக்கையுடன் தொடங்கி பிறகு விரைவில் ஆட்டமிழக்கவும் செய்தார்.

இப்போது யார்க்‌ஷயரில் ஒரு முழு கிரிக்கெட் சீசனில் ஆடுவது புஜாராவுக்கு பெரிய அளவில் தன்னம்பிக்கையை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in