ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மும்பை இளம் வீரர் சர்பராஸ் கானின் அதிரடி

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மும்பை இளம் வீரர் சர்பராஸ் கானின் அதிரடி
Updated on
3 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் மும்பையைச் சேர்ந்த 17-வயது இளம் வீரர் சர்பராஸ் கான் அதிரடி ஆட்டம் ஆடி தனது திறமையை நிரூபித்தார்.

டிவில்லியர்ஸின் அதிரடி 57 ரன்களுக்குப் பிறகு அவர் ரன் அவுட் ஆக, 14-வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொள்ள களமிறங்கிய சர்பராஸ் கான் 21 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 130/4 என்று இருந்தது, இவரது அதிரடியால் கடைசி 5 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்து 200 ரன்கள் எடுத்தது.

பிறகு ஆட்டம் மழை காரணமாக விளையாட முடியாமல் போக புள்ளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த பிறகு இறங்கிய சர்பராஸ் கான் ஏதோ ஒரு விதத்தில் அவரது அதிரடியைத் தொடர்ந்தது போலவே இருந்தது. முதலில் ஜேம்ஸ் பாக்னர் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை தேர்ட் மேன் திசையில் ஒரு சேவாக் பாணி ‘அப்பட் கட்’ ஆடி பவுண்டரி அடித்தார் சர்பராஸ்.

பிறகு ஷேன் வாட்சன் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை ஆஃப் திசையில் அபாரமாக அடித்தார்.

அதன் பிறகு இவரது உண்மையான அதிரடி என்னவென்பதை வெளிப்படுத்தினார் சர்பராஸ் கான். ராஜஸ்தான் அணியின் 43 வயது மூத்த அனுபவசாலி ஸ்பின்னரான பிரவீன் தாம்பே ஓவரை பிரித்து மேய்ந்தார். தாம்பே வீசிய முதல் பந்துக்கு சற்றே லெக் திசையில் ஒதுங்குவது போல் போக்கு காட்டி பிறகு ஸ்டம்ப்களை மறைக்கும் விதமாக உள்புறமாக நகர்ந்து வந்து ஃபைன்லெக் திசையில் அருமையான பவுண்டரி அடித்தார்.

அடுத்த பந்தே மேலேறி வந்து பவுலர் தலைக்கு மேல் நேராக ஒரு அற்புதமான சிக்சரை அடித்தார். அதன் பிறகு இன்சைட் அவுட் சென்று லாங் ஆஃபில் ஒரு அருமையான ஷாட்டில் பவுண்டரி விளாசினார். தாம்பேயின் இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் வந்தது. பிறகு 19-வது ஓவரின் கடைசி பந்தில் தவல் குல்கர்னி பந்தை துடுப்பு போல் மட்டையைப் பயன்படுத்தி விக்கெட் கீப்பருக்கு பின்னால் அபாரமாக தூக்கி விட பந்து பவுண்டரிக்குப் பறந்தது. அதன் பிறகும் 2 பவுண்டரிகள் அடித்திருப்பார். ஆனால் கடைசி ஓவரில் பாக்னர் ஒரு தடுப்பையும், ஸ்டூவர்ட் பின்னி ஒரு தடுப்பையும் நிகழ்த்த இந்த 2 ஷாட்களிலும் முறையே 2 ரன்களே கிடைத்தன.

சர்பராஸ் கான் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்த இன்னிங்ஸ் முழுதும் தெரிந்தது பயமற்ற அவரது அணுகுமுறையே. அருமையான ‘ரிஃப்ளெக்ஸ்’ இவருக்கு, கால்கள் வேகமாக நகர்கின்றன. கை-கண் ஒருங்கிணைப்பு என்று கூறுவார்களே அது அபாரமாக அமைந்த ஒரு வீரராக அவர் தெரிகிறார்.

யார் இந்த சர்பராஸ் கான்?

மும்பை கிரிக்கெட்டுக்கு இளம் திறமைகளை அளித்துக் கொண்டிருக்கும் ஆசாத் மைதானின் விளைவே சர்பராஸ் கான். இவரது திறமை 2009-ம் ஆண்டு தெரியவந்தது. பள்ளிகளுக்கு இடையேயான ஹாரிஸ் ஷீல்ட் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஒரு இன்னிங்ஸில் சர்பராஸ் கான் 439 ரன்கள் எடுத்து சாதனை படைத்தவர். அதன் பிறகு பேட்டிங்கில் மட்டுமல்லாது, பீல்டிங், மற்றும் லெக் பிரேக் பவுலராகவும் உருவெடுத்து ஆல்ரவுண்ட் திறனாக தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் நுழைந்துள்ளார்.

மும்பை கிரிக்கெட் சங்கத்தினால் வயது விவகாரம் காரணமாக சிறிது காலம் இடைகால தடை விதிக்கபப்ட்ட சர்பராஸ் கான் எதிர்கொண்ட துயரமான காலக் கட்டமாகும் இது. அப்போது கிரிக்கெட்டை விட்டே சென்று விடலாம் என்று தனது மகன் நினைத்ததாக அவரது தந்தையும் பயிற்சியாளருமான நவுஷத் கான் ஒரு முறை தெரிவித்திருந்தார். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்ற லட்சியமே, கனவே தன் மகனை அந்த நெருக்கடி காலக்கட்டத்திலிருந்து மீளச் செய்தது என்கிறார் தந்தை நவுஷத் கான்.

அதன் பிறகு மும்பை அண்டர்-19 அணியில் இடம்பெற்று சில பிரமாதமான ஆட்டங்களை வெளிப்படுத்த இந்தியா அண்டர் 19 அணியில் இடம்பெற்றார். அப்போது நடைபெற்ற 4 நாடுகள் மோதிய அண்டர் 19 போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 66 பந்துகளில் 101 ரன்கள் விளாசி 292 ரன்கள் இலக்கை அனாயசமாக வெற்றி பெற்றுக் கொடுத்தார்.

துபாயில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பை முதல் சுற்று ஆட்டங்களில் சவாலான பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது ஆல்ரவுண்ட் திறமைகளை நிரூபித்தார் சர்பராஸ் கான். இந்திய அணி 94/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த போது 20-வது ஓவரில் களம் கண்ட சர்பராஸ் கான், சஞ்சு சாம்சனுடன் இணைந்தார். சஞ்சு அப்போது 15 ரன்களுடன் ஆடி வந்தார். சர்பராஸ்-சஞ்சு சாம்சன் ஜோடி 5-வது விக்கெட்டுக்காக 119 ரன்களைச் சேர்த்தனர்.

சர்பராஸ் கான் 78 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.

பந்துவீச்சில் இடது கை பேட்ஸ்மென்களுக்கு ஆஃப் ஸ்பின் பந்துகளையும், வலது கை பேட்ஸ்மென்களுக்கு லெக் ஸ்பின் பந்துகளையும் வீசக்கூடிய திறமை படைத்தவர் சர்பராஸ். 3 ஓவர்களே அன்று வீசினாலும் முக்கிய விக்கெட்டான ஹசன் ராஸா விக்கெட்டை இவர் கைப்பற்றினார்.

அன்றைய தினம் இவர் பிடித்த 4 கேட்ச்கள் திருப்பு முனை ஏற்படுத்தியது.

சர்பராஸ் கான், சஞ்சு சாம்சன், அதே போல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டிகளில் கலக்கிய தமிழக வீரர் பாபா அபராஜித் போன்ற இளம் திறமைகள் இந்திய அணியின் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நுழைய நிறைய படிகளைக் கடந்து வந்தாக வேண்டும் என்றாலும், இந்திய டி20 அணியில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துப் பார்க்கலாம்.

அடுத்த டி20 உலகக் கோப்பையில் இளம் திறமைகளுக்கு வாய்ப்பு அளிக்குமா இந்திய அணித் தேர்வுக் குழு?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in