

சீனாவின் சுஸாவ் நகரில் நடை பெற்று வரும் உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி யின் ஆடவர் ஒற்றையர் பிரதான சுற்றில் பங்கேற்க இந்தியாவின் சத்தியன் தகுதி பெற்றுள்ளார்.
சர்வதேச தரவரிசையில் 188-வது இடத்தில் இருக்கும் சத்தியன், தனது இறுதி தகுதிச்சுற்றில் 11-7, 11-8, 11-4 என்ற நேர் செட்களில் சிலியின் ஃபெலிப் ஆலிவரைத் தோற்கடித்தார்.
பிரதான சுற்றுக்கு எளிதாக முன்னேறியிருக்கும் சத்தியனுக்கு அடுத்ததாக கடும் சவால் காத்திருக் கிறது. அவர் தனது முதல் சுற்றில் சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் இருக்கும் ஸ்வீடனின் ஜெரல் பாரை சந்திக்கிறார்.
அதேநேரத்தில் மற்றொரு இந்தியரான சேனில் ஷெட்டி தனது இறுதி தகுதிச்சுற்றில் 12-10, 13-15, 11-9, 6-11, 11-7, 13-15, 9-11 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் எலியா ஸ்மிட்டிடம் தோல்வி கண்டு பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்பை இழந்தார்.
இந்தியாவின் முதல் நிலை வீரரான அஜந்தா சரத் கமல் தனது முதல் சுற்றில் வட கொரியாவின் பார்க் சின் ஹாக்கை சந்திக்கிறார். தரவரிசையில் கீழ்நிலையில் இருக்கும் பார்க் சின்னை எளிதாக வீழ்த்தி சரத் கமல் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீராங்கனைகள் அனைவரும் தங்களின் முதல் சுற்றில் தரவரிசையில் தங்களைவிட முன்னிலையில் இருக்கும் வீராங்கனைகளை சந்திக்கவுள்ளனர்.
சர்வதேச தரவரிசையில் 172-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மவுமா தாஸ், 69-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவின் மிகைலோவா பொலினாவையும், இந்தியாவின் கே.ஷாமினி, 85-வது இடத்தில் இருக்கும் லிதுவேனியாவின் ருதாவையும் சந்திக்கின்றனர். 803-வது இடத்தில் இருக்கும் மணிகா பத்ரா, 36-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் ஹிரனோ மியூவை சந்திக்கிறார்.