

உலகக் கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து வெளியேறியதற்கு அனுஷ்கா சர்மா மீது ட்விட்டர்வாசிகள் பாய்ந்தனர். இது குறித்து விராட் கோலி வெளிப்படையாக முதல் முறையாக செய்தியாளர்களிடம் பேசினார்.
ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நாளை விளையாடுகிறது. இதனை முன்னிட்டு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் முடிவில் செய்தியாளர்கள் இடத்தைக் காலி செய்ய எழுந்திருந்த போது கோலி மீண்டும் பேசத் தொடங்கியுள்ளார்:
"நான் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், அனைவரும் இவற்றைக் குறிப்புகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு நடந்த விஷயங்கள்... எனது சொந்த வாழ்க்கை, குறிப்பாக அனுஷ்கா சர்மாவின் சொந்த வாழ்க்கை குறித்த ரசிகர்களின் எதிர்வினை உண்மையில் மரியாதை குறைவானது.
நான் இதனை பொதுவெளியில் தெரிவிக்க விரும்புகிறேன். ஏனெனில் ஒரு மனிதன் என்ற அளவில் நான் இந்த வசைகளினால் மிகவும் காயமடைந்துள்ளேன். எனவே இதனை நான் நீண்ட நாட்களுக்குக் கூறிக் கொண்டுதான் இருக்கப் போகிறேன்.
நாங்களும் மனிதர்களே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் என்ன செய்கிறோமோ, அதைத்தான் செய்து வருகிறோம். அணியின் தோல்விக்கு அனுஷ்காவை குறை கூறுவதும், எனது தோல்விக்கும் அவரை வசை பாடுவதும் முற்றிலும் என்னைக் காயப்படுத்தியுள்ளது. ஒரேயொரு தோல்விக்கு ரசிகர்கள் இப்படி எதிர்வினையாற்றுகிறார்கள் என்பது வெட்கக் கேடானது.
நான் இதனை வெளிப்படையாகத் தெரிவிக்க விரும்புவதன் காரணம், இப்படிப்பட்ட விவகாரங்களினால் நாங்கள் எப்படி பாதிக்கப்படுகிறோம் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளத்தான்.
கடந்த 5 ஆண்டுகளாக நிறைய போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற உதவியுள்ளேன். என் அளவுக்கு சீரான அளவில் அணியில் வேறு ஒருவரும் விளையாடவில்லை. இந்திய அணியில் என்னை விடவும் சிறப்பாக ஆடியவர்கள் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கவில்லை.”
இவ்வாறு பொரிந்து தள்ளினார் விராட் கோலி.