

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியோடு ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிதி, தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணிகளில் ஒன்றான பாகிஸ்தான், மூத்த வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு மிகவும் பலவீனமடைந்துள்ளது. அதன் எதிரொலியாக கத்துக்குட்டி அணியான வங்கதேசத்திடம் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடுவதற்காக அப்ரிதி, அஹமது ஷெஸாத் உள்ளிட்ட வீரர்கள் கராச்சி விமான நிலையத்தில் இருந்து டாக்காவிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அப்ரிதியிடம் ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுவிட்டு மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப வாய்ப்புள்ளதா என கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அப்ரிதி கூறியதாவது: ஓய்வு குறித்து நான் எடுத்த முடிவு இறுதியானது. அணியில் உள்ள இளம் வீரர்கள் சிறப்பாக ஆடுவதற்கு கொஞ்ச காலம் ஆகும். அவர்களுக்கு உரிய கால அவகாசம் அளிப்பது மிக முக்கியமானதாகும்” என்றார்.
2016-ல் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் வாகை சூடுவதற்காக வலுவான அணியை கட்டமைப்பதிலேயே எனது கவனம் உள்ளது எனக்கூறிய அப்ரிதி, “வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்திருந்தாலும், அதன் தாக்கம் டி20 அணியை எந்த விதத்திலும் பாதிக்காது. வங்கதேசத்துக்கு எதிரான ஒரேயொரு டி20 போட்டியை வெல்ல விரும்புகிறோம்” என்றார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளில் சயீத் அஜ்மல் பெரிய அளவில் ஜொலிக்காததால், கடும் விமர் சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அது குறித்துப் பேசிய அப்ரிதி, “ஒரு போட்டியில் மோசமாக ஆடிய தற்காக அஜ்மலின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது எனக்கூறுவது நியாயமற்றது. அவர் நாட்டுக்காக சிறப்பாக விளை யாடியிருக்கிறார். அதனால் ஓரிரு போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு இறுதி முடிவுக்கு வரக்கூடாது” என்றார்.
அனைத்து வகையான போட்டி களிலும் அனைத்துத் துறைகளிலும் பாகிஸ்தான் அணி முன்னேற்றம் அடைவது அவசியம் எனக்கூறிய அப்ரிதி, “பேட்ஸ்மேன்கள் மிகுந்த பொறுப்புணர்வோடு விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முக்கியம். எந்த வகையான போட்டியாக இருந்தாலும் பார்ட்னர்ஷிப் என்பது மிக முக்கியமானதாகும். அதற்காக சதமடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஒவ்வொரு பேட்ஸ்மேனும் 40, 50 ரன்கள் எடுத்து அணியின் ரன் குவிப்புக்கு முக்கியப் பங்களிக்க வேண்டும்.
அஹமது ஷெஸாத், உமர் அக்மல் ஆகியோர் திறமையான வீரர்கள். அவர்களால் பாகிஸ்தானுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட முடியும். அவர்கள் இருவரையும் முற்றிலுமாக அணியில் இருந்து நீக்கும் முடிவை நான் ஏற்கவில்லை. அவர்களுடைய செயல்பாடுகளில் ஏதாவது பிரச்சினை இருந்தால், அணி நிர்வாகம் அவர்களை அழைத்து அது தொடர்பாக பேச வேண்டும்” என்றார்.