

உலக டென்னிஸ் மகளிர் பிரிவு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா முதல் முறையாக முதலிடம் பிடித்தார். இப்போது டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா மிர்ஸா நம்பர் 1.
இந்தத் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறிய சானியா மிர்ஸா, 7660 புள்ளிகளுடன், இத்தாலியின் சாரா எரானியை (7640 புள்ளிகள்) பின்னுக்குத் தள்ளினார்.
சார்ல்ஸ்டனில் ஃபேமிலி சர்க்கிள் கோப்பையில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றதையடுத்து இந்த மகுடம் கிட்டியது.
இந்த வெற்றியினால் சானியா மிர்ஸாவுக்கு 470 புள்ளிகள் கிடைத்தன. இதற்கு முன்பாக 1990-ம் ஆண்டுகளில் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆதிக்கம் செலுத்திய மகேஷ் பூபதி, லியாண்டர் பயஸ் ஆகியோர் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி களம் புகுந்தனர். அதன் பிறகு ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் வெற்றியை ருசித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி. | படம்: ஏ.பி.
இந்தியன்வெல்ஸ், மியாமி, ஃபேமிலி சர்க்கிள் கோப்பை என்று தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது சானியா-ஹிங்கிஸ் வெற்றி ஜோடி.
3 டென்னிஸ் தொடர்களில் சுமார் 14 ஆட்டங்களில் சானியா-ஹிங்கிஸ் 3 செட்களை மட்டுமே இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சானியா-ஹிங்கிஸ் இணை டென்னிஸ் இரட்டையர் அரங்கில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று நிபுணர்கள் மத்தியில் பரவலான கருத்து நிலவுகிறது.
இந்திய வீராங்கனை ஒருவர், உலக டென்னிஸ் மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பெறுவது இதுவே முதல் முறை எனும் விதத்தில், சானியா மிர்ஸா படைத்திருப்பது புதிய சரித்திரம்.