

ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மரியா ஷரபோவாவுக்கு அதிர்ச்சியளித்த கெர்பர், தற்போது காலிறுதியில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த ரஷ்ய வீராங்கனை எக்டெரினா மகரோவாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்துள்ளார்.
வெற்றி குறித்துப் பேசிய கெர்பர், “பேசுவதற்கு வார்த்தைகள் வரவில்லை. அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது வியப்பாக இருக்கிறது. டென்னிஸ் மீதான எனது ரசிப்பும், வெறியும் மீண்டும் எனக்குள் ஏற்பட்டுள்ளது” என்றார்.
சர்வதேச தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் கெர்பர், அடுத்ததாக அமெரிக்காவின் மேடிசன் பிரெங்லேவை சந்திக்கிறார். மேடிசன் தனது காலிறுதியில் 3-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவைத் தோற்கடித்தார். மற்றொரு காலிறுதியில் உலகின் 3-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இத்தாலியின் சாரா எர்ரானியை வீழ்த்தினார்.
ஹேலப் தனது அரையிறுதியில் முன்னாள் முதல் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்கிறார். வோஸ்னியாக்கி தனது காலிறுதியில் 6-0, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் சுவாரெஸ் நவரோவை தோற்கடித்தார்.