முதலிடத்தை நீண்ட காலம் தக்கவைக்க முடியும்: சாய்னா நம்பிக்கை

முதலிடத்தை நீண்ட காலம் தக்கவைக்க முடியும்: சாய்னா நம்பிக்கை
Updated on
1 min read

தரவரிசையில் முதலிடத்தை தக்கவைப்பது எளிதல்ல என்றாலும், அதை நீண்ட காலம் தக்கவைக்க முடியும் என நம்புகிறேன் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனையான சாய்னா மேலும் கூறியதாவது: முதலிடத்தை தக்கவைப்பது மிகவும் கடினமானது. எனினும் அந்த இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனையான எனக்கு மக்கள் மதிப்பளிக்க வேண்டும்.

எல்லாம் சரியாக நடந்து, நானும் சரியாக பயிற்சி பெறும்பட்சத்தில் நீண்டகாலம் முதலிடத்தைத் தக்கவைக்க முடியும். ஆனாலும் அது எளிதல்ல. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். முதலிடத்தில் இருக்கும்போது அதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் தீவிரமாக உழைக்க வேண்டும். நாட்டுக்காக மேலும் பல போட்டிகளில் பட்டம் வெல்வதற்காக என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாட முயற்சிப்பேன் என்றார்.

உங்களுடைய முதலிடத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பது யார் என சாய்னாவிடம் கேட்டபோது, “எல்லாருமே அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். அதனால் ஒருவர் பெயரை மட்டும் சொல்ல முடியாது. எனினும் என்னுடைய போட்டியாளர்களில் சீனாவின் லீ ஸியூரூய் முதலிடத்தில் உள்ளார். ஏனெனில் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அவர் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார். அதனால் அவர் முதலிடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in