Published : 08 Apr 2015 16:00 pm

Updated : 08 Apr 2015 17:25 pm

 

Published : 08 Apr 2015 04:00 PM
Last Updated : 08 Apr 2015 05:25 PM

அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி டேர் டெவில்ஸ்?

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர் டெவில்ஸ் அணிகள் நாளை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியில் களமிறங்குகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான கடந்த ஐபிஎல் போட்டி சர்ச்சைகள் இன்னமும் உயிருடன் உள்ள நிலையில், சர்ச்சைகளை புறமொதுக்கி ஆட்டத்தில் அந்த அணி கவனம் செலுத்தவுள்ளதாக அணி நிர்வாகம் கூறுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையிலான 7 தொடர்களில் மிகவும் சீரான முறையில் ஆடி வெற்றிகளைக் குவித்து வரும் அணி தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ். மாறாக டெல்லி டேர் டெவில்ஸ் அணி முற்றிலும் புதிய கேப்டனான ஜே.பி.டுமினியின் தலைமையின் கீழ் ஒரு புதிய அணியை களமிறக்குகிறது.

இதற்கு முந்தைய 7 ஐபிஎல் தொடர்களிலும் இறுதி 4 அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ். 4 இறுதிப் போட்டிகளில் விளையாடி 2 முறை சாம்பியன் பட்டமும் தோனியின் தலைமையின் கீழ் வென்றுள்ளது சென்னை.

ரசிகர்களின் பேராதரவு பெற்ற ஒரு அணி இருக்கிறதென்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் அது மிகையாகாது.

அணிக்கு மீண்டும் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி திரும்பியுள்ளார். இர்பான் பதான் வந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் கைல் அபாட் மற்றும் லெக் ஸ்பின்னர் ராகுல் சர்மா ஆகியோரும் உள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கலக்கிய பிரெண்டன் மெக்கல்லம்மின் ஆட்டம் இந்த முறை ஐபிஎல் போட்டிகளை ஜொலிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.

நடுவரிசையில், எப்போதும் ஃபார்மில் இருக்கும் சுரேஷ் ரெய்னா, ஹஸ்ஸி, தோனி, டிவைன் பிராவோ, ஆகியோர் இருக்க ஆல் ரவுண்டர்கள் ஜடேஜா, மற்றும் அஸ்வின் உள்ளனர்.

பந்துவீச்சில் கைல் அபாட் தவிர மணிக்கு 150 கிமீ வேகத்தில் சீராக வீசும் நியூஸிலாந்தின் மேட் ஹென்றி இருக்கிறார். உலகக் கோப்பை ஃபார்மைத் தொடரும் முனைப்புடன் மோஹித் சர்மா இருக்கிறார்.

டெல்லி அணியில் யுவராஜ் சிங் எனும் திமிங்கிலம் உள்ளது. எப்படியாவது மீண்டும் அணியில் இடம்பெறத் துடித்துக் கொண்டிருக்கும் இவர் விக்கெட் கீப்பர் நிலையில் இருக்கும் தோனியை கவரும் விதமாக, அல்லது அசத்தும் விதமாக நிச்சயம் ஒரு அனாயாச மட்டை சுழற்றல் இன்னிங்ஸை காண்பிப்பார் என்று ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

டெல்லி அணியில் யுவராஜ், ஜே.பி.டுமினி, மயங்க் அகர்வால், குவிண்டன் டி காக், கேதர் ஜாதவ், மனோஜ் திவாரி ஆகியோர் இருக்கின்றனர். மேத்யூஸ் இலங்கை வீரர் என்பதால் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை.

பந்துவீச்சில் ஜாகீர் கான், மொகமது ஷமி, நேதன் கூல்டர் நீல் என்ற ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஆகியோர் உள்ளனர். ஸ்பின் துறையில் இம்ரான் தாஹிர் உள்ளார். இவர் அல்லது அமித் மிஸ்ரா அணியில் நிச்சயம் இடம்பெறுவது உறுதி. சென்னை முன்னாள் வீரர் ஆல்பி மோர்கெல் டெல்லி அணியில் தற்போது இருக்கிறார். அவரை விளையாட வைக்க வாய்ப்பு குறைவென்றாலும் சென்னை அணிக்கு எதிராக அவரது அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள டெல்லி முனையலாம்.

சென்னை அணி (உத்தேசம்): தோனி, ரெய்னா, பிரெண்டன் மெக்கல்லம், மைக் ஹஸ்ஸி, டிவைன் பிராவோ, டுபிளெஸ்ஸிஸ், ஜடேஜா, அஸ்வின், மோஹித் சர்மா, இர்பான் பதான், கைல் அபாட்/ஈஸ்வர் பாண்டே

டெல்லி டேர் டெவில்ஸ்:(உத்தேசம்) ஜே.பி.டுமினி, மாயங்க் அகர்வால், டி காக், கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், மனோஜ் திவாரி/ஆல்பி மோர்கெல், சவுரவ் திவாரி, ஜெய்தேவ் உனட்கட், ஜாகீர் கான், மொகமது ஷமி, அமித் மிஸ்ராஐபிஎல் கிரிக்கெட் 2015டி20சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி டேர் டெவில்ஸ்தோனியுவராஜ் சிங்IPL 2015T20 cricketCSK Vs Delhi Dare DevilsDhoniYuvraj Singh

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x