Published : 16 Apr 2015 07:10 PM
Last Updated : 16 Apr 2015 07:10 PM

தோனி படையை வீழ்த்தி கணக்கைத் தொடங்குமா மும்பை?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட்டில் 3 போட்டிகளிலும் தோல்வி தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி வெள்ளிக்கிழமை, மும்பை வான்கடே மைதானத்தில் வலுவான அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.

தற்போதைய நிலவரங்களின் படி நாளைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கையே ஓங்கியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் கொல்கத்தாவிடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பிறகு கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக 18 ரன்களில் தோல்வி தழுவியது. பிறகு கடந்த செவ்வாயன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகப்பெரிய கவலை அதன் சொத்தையான பந்துவீச்சுதான்.அதுவும் மெக்கல்லம் இருக்கும் ஃபார்மில் இந்த சொத்தைப் பந்துவீச்சை வைத்துக் கொண்டு மும்பை நாளை சமாளிப்பது மிக மிகக் கடினமே.

மாறாக தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 வெற்றிகளுடன் பலமாக திகழ்கிறது. மும்பை அணியின் சவாலாக அதன் அதிரடி தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் காயம் காரணமாக ஐபிஎல்-ல் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் லெண்டில் சிம்மன்ஸ் அல்லது எய்டன் பிளிசார்ட் போன்ற வீரர்கள் கைவசம் உள்ளனர்.

சென்னை கேப்டன் தோனி அன்று முன்னதாக களமிறங்கி தனது பாணி அதிரடி சுழற்றலில் 29 பந்துகளில் அரைசதம் எடுத்து தனது பலத்தைக் காட்ட மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவோ அடுத்தடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக டக் அவுட் ஆகியுள்ளார்.

எனவே கோரி ஆண்டர்சன், கெய்ரன் பொலார்டை நம்பியே மும்பை இந்தியன்ஸ் இருக்கிறது. ஹர்பஜன் ஒரு போட்டியில் வீரவாள் சுழற்றினார். ஆனாலும் பயனில்லாத ஆட்டமாக அது போனது.

பந்து வீச்சில் மலிங்கா ஒன்றுமில்லாமல் இருக்கிறார். நாளை மெக்கல்லம் கண்ணெதிரே அவரை காண்பிக்காமல் இருப்பது நலம் என்றே இப்போதைக்கு தெரிகிறது.

ஆனால் புள்ளி விவரங்கள் அடிப்படையில் இதுவரை 20 முறை சென்னை-மும்பை அணிகள் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் முறையே 10 போட்டிகளில் வென்று சமநிலை வகித்து வருகின்றன.

சென்னை பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது. அஸ்வின் இதுவரை சிறப்பாக வீசி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே சென்னையை வீழ்த்த முடியும் என்ற நிலையே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x