

பார்சிலோனா பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் 3-வது சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் அதிர்ச்சி தோல்வி கண்டார்.
ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருந்த நடால் 4-6, 6-7(6) என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதன்மூலம் பார்சிலோனா ஓபனில் 9-வது பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளார் நடால்.
பிரெஞ்சு ஓபன் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் தனது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்சிலோனா ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலேயே நடால் தோல்வி கண்டிருப்பது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத் தியுள்ளது.
இதுவரை நடாலுடன் 6 முறை மோதியுள்ள ஃபாக்னினி தற்போது 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். ஃபாக்னினி தனது காலிறுதியில் ஸ்பெயினின் பாப்லோ அண்டுஜாருடன் மோதுகிறார். அண்டுஜார் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சகநாட்டவரும், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்தவருமான ஃபெலிஸியானோ லோபஸை தோற்கடித்தார்.
2014 சீசனில் தொடர் காயங்களை சந்தித்த நடால், இப்போது அதிலிருந்து மீண்டுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 10-வது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ள அவர், இப்போது அதிர்ச்சி தோல்விகளை சந்தித்து வருகிறார். அதனால் அடுத்த மாதம் தொடங்கவுள்ள பிரெஞ்சு ஓபனில் நடாலால் ஆதிக்கம் செலுத்த முடியுமா என்ற கேள்வியெழுந்துள்ளது.