

டெல்லியில் நடைபெற்று வரும் உபர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெறும் காலிறுதியில் சாய்னா நெவால் தலைமையிலான இந்திய மகளிர் அணி, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேசியாவை சந்திக்கிறது.
மற்ற காலிறுதி ஆட்டங்களில் 12 முறை சாம்பியன் பட்டம் வென்ற சீன அணி, இங்கிலாந்தையும், 2010 சாம்பியனான கொரிய அணி தாய்லாந்தையும், 5 முறை சாம்பியனான ஜப்பான் டென்மார்க்கையும் சந்திக்கின்றன.
‘ஒய்’ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி, குரூப் சுற்றில் கனடா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய அணிகளை வென்று அந்தப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இந்திய அணிக்கு ஒற்றையர் பிரிவில் சாய்னா, சிந்து ஆகியோரும், இரட்டையர் பிரிவில் ஜுவாலா கட்டா-அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணியின் 3-வது ஒற்றையர் வீராங்கனையான பி.சி.துளசி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி கண்டுள்ளார். இரட்டையர் பிரிவில் 2-வது ஜோடியாக சாய்னாவும், பி.சிந்துவும் களமிறங்கலாம். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் இந்தோனேசிய அணியும் ஒற்றையர் பிரிவில் பலம் வாய்ந்த வீராங்கனைகளைக் கொண்டுள்ளது. சர்வதேச தரவரிசையில் 23-வது இடத்தில் உள்ள லின்டாவெனி பனெட்ரி, 24-வது இடத்தில் உள்ள பெலட்ரிக்ஸ் மனுபுட்டி, 82-வது இடத்தில் உள்ள அட்ரியான்டி பிர்டஸாரி ஆகியோர் பலம் சேர்க்கின்றனர்.