

24-வது அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கனடாவை எதிர்கொண்டது இந்தியா. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் இந்தியாவின் ரூபிந்தர் பால் சிங் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். அதைத்தொடர்ந்து 32-வது நிமிடத்தில் ரகுநாத் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.
2-வது பாதி ஆட்டத்தின் 43-வது நிமிடத்தில் கனடா தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் ஆலிவர் இந்த கோலை அடித்தார். இதையடுத்து இந்தியாவின் ரமண்தீப் சிங் இரு கோல்களை (46 மற்றும் 47-வது நிமிடங்களில்) அடிக்க, இந்தியா 4-1 என முன்னிலை பெற்றது.
இதன்பிறகு 49-வது நிமிடத்தில் கனடாவின் ஜெகதீஷ் கோலடிக்க, அதே நிமிடத்தில் இந்தியாவும் கோலடித்தது. இந்த கோலை சத்பீர் சிங் அடித்தார். இதன்பிறகு போராடிய கனடா அணிக்கு 52-வது நிமிடத்தில் டேவிட் கோலடித்தார். இதன்பிறகு கோல் எதுவும் விழாமல் போகவே, இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவுக்கு நிகராக பந்தை தன்வசம் வைத்திருந்தாலும், நிறைய கோல் வாய்ப்புகளை கோட்டைவிட்டது. இந்திய அணியின் பின்கள வீரர்கள் வழக்கம்போல் இந்த முறையும் சொதப்பினர். கனடாவை எளிதாக கோலடிக்கவிட்டனர்.
இந்தியா தனது 4-வது ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முன்னதாக தென் கொரியாவுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்த இந்திய அணி, நியூஸிலாந்திடம் 1-2 என்ற கோல் கணக்கிலும், மலேசியாவிடம் 2-3 என்ற கோல் கணக்கிலும் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.