Published : 03 Apr 2015 06:04 PM
Last Updated : 03 Apr 2015 06:04 PM

ஐபிஎல் தொடரில் ஜொலித்து காணாமல் போன அஸ்னோட்கர்

ஐபிஎல் கிரிக்கெட் அதன் 8-வது தொடரை வெற்றிகரமாகக் காணவுள்ளது. ஏகப்பட்ட விமர்சனங்கள், ஸ்பாட் பிக்சிங் புகார்கள் என்று கடும் சோதனைகளைச் சந்தித்து வந்தாலும் இன்னும் உற்சாகம் குன்றாமல் ஐபிஎல் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் எவ்வளவோ வீரர்கள் வருகின்றனர், செல்கின்றனர். ஆனால் ஒரு தொடரில் நன்றாக ஆடி விட்டு அடுத்த தொடரில் சொதப்பி, திறமைத் தெறிப்பைக் காண்பித்து விட்டு அமிழ்ந்து போன வீரர்கள் உள்ளனர். அதில் ஒருவர்தான் கோவாவைச் சேர்ந்த ஸ்வப்னில் அஸ்னோட்கர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்ற 2008-ம் ஆண்டின் ஐபில் தொடரில் ஸ்வப்னில் அஸ்னோட்கரின் திறமையை கண்டெடுத்து வளர்த்தவர் ஷேன் வார்ன்.

2008-இல் ஐபிஎல் நிர்வாகம் அதன் தொடக்கப் போட்டித் தொடரை பிரம்மாண்டமாக நடத்தியது. உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து திறமை மிக்க நட்சத்திர வீரர்களுடன் முகம் தெரியாத உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களும் ஆடி வண்ணம் சேர்த்த தொடராகும் அது.

அதில் ஷேன் வார்ன் தலைமையில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஸ்வப்னில் அஸ்னோட்கர் என்ற ஒரு சிறிய உருவம் தொடக்கத்தில் களமிறங்கி கலக்கியதை நாம் இப்போது மறந்திருக்கலாம்.

அவர் புதிய பந்தை மிக தைரியமாக எதிர்கொண்டு தன் போக்கில் அருமையான அதிரடி ஷாட்களை ஆடினார். அப்போதைய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ஷேன் வார்ன் இவரை ‘கோவா பீரங்கி’ என்றே வர்ணித்தார்.

2008 ஐபில் தொடரில் 9 போட்டிகளில் 311 ரன்களை அவர் விளாசினார். இவர் பேட்டிங் ஸ்டைல் இலங்கை கிரிக்கெட்டில் கலக்கிய ரொமேஷ் கலுவிதரானாவை நினைவு படுத்தும் ஒன்றாகும்.

முதல் தர கிரிக்கெட்டில் கோவா அணிக்காக ஆடிய இவர் 66 போட்டிகளில் 4442 ரன்களை 41.12 என்ற சராசரியின் கீழ் பெற்றுள்ளார். 10 சதங்கள் 21 அரைசதங்கள். 254 இவரது அதிகபட்ச ஸ்கோர். 2007-08 ரஞ்சி சீசனில் இவர் 640 ரன்களை 71.11 என்ற சராசரியுடன் பெற்றிருந்தார். இதனையடுத்தே இவரது திறமை கண்டுபிடிக்கப்பட்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது.

முதல் சில போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்தார். ஆனால் அதன் பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தொடரின் 18-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் ஸ்மித்துடன் களமிறங்கினார் அஸ்னோட்கர். கொல்கத்தா அணியில் டிண்டா, இஷாந்த் சர்மா, உமர் குல், அகர்கர் என்று தரமான பவுலர்கள் இருந்தனர்.

திடீரென உயரம் குறைவான ஒரு வீரர் ஸ்மித்துடன் களமிறங்கியதைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அஸ்னோட்கரின் மூர்த்தி சிறியதாக இருந்தாலும் அவரது கீர்த்தி பெரியது என்று அன்று தெரிந்தது. அவர் 34 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 60 ரன்களை விளாசினார். அனைத்து ஷாட்களையும் திறம்பட வெளிப்படுத்திய இன்னிங்ஸ் ஆகும் அது. அவர்தான் அன்றைய போட்டியில் அதிக பட்ச ஸ்கோர் ராஜஸ்தான் வெற்றிய ருசித்தது.

அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 32 ரன்களை எடுத்தார். கிரேம் ஸ்மித்துடன் இணைந்து முதல் 10 ஓவர்களில் தொடக்க விக்கெட்டுக்காக 78 ரன்கள் சேர்க்கப்பட்டது. வெற்றி இலக்கு 110 ரன்கள்தான். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான்.

அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் சொதப்பி 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ஸ்வப்னில் அஸ்னோட்கர் 36 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் எடுத்த 39 ரன்களே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் தோற்றது.

நடுவில் 2-3 போட்டிகளில் அஸ்னோட்கர் இல்லை. மீண்டும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். 44 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ரன்கள். 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 197/1 விக்கெட் மட்டுமே. இந்தப் போட்டியில் இவர் ஜாகீர் கான், அனில் கும்ளே பந்துகளையும் திறம்பட எதிர்கொண்டார். பெங்களூரு அணி தோற்றது.

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கிரேம் ஸ்மித் (91) உடன் அருமையான தொடக்கம் கொடுத்தார் அஸ்னோட்கர், அன்று அவர் 27 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் எடுக்க தொடக்க விக்கெட்டுக்காக 11.1 ஓவர்களில் 127 ரன்கள் விளாசப்பட்டது. 211 ரன்கள் குவீக்க சென்னை அணி மகாவிரட்டலில் 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

பிறகு அரையிறுதியில் மீண்டும் அஸ்னோட்கர் டெல்லி அணிக்கு எதிராக 21 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 39 ரன்கள் எடுத்தார். அன்று மெக்ராவின் பந்து வீச்சையும் எதிர்கொண்டார் அஸ்னோட்கர். மீண்டும் ஸ்மித்துடன் நல்ல தொடக்கம் 40 பந்துகளில் 65 ரன்கள் தொடக்கம் கண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் 192 ரன்களை எடுக்க டேர் டெவில்ஸ் 87 ரன்களுக்குச் சுருண்டது.

இறுதிப் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக அஸ்னோட்கர் 20 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் அணி சென்னையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

முதல் ஐபிஎல் அபார ஆட்டத்துக்குப் பிறகு அந்த ஆண்டில் பிற்பாடு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஏ அணிகள் 50 ஓவர் முத்தரப்பு தொடருக்காக இந்தியா வந்த போது, ரெய்னா, ரோஹித் சர்மா, பதான் சகோதரர்கள் கொண்ட பலமான இந்திய அணியில் அஸ்னோட்கர் இருந்தார். ஆனால் 3 இன்னிங்ஸ்களில் அவர் 23 ரன்களையே எடுக்க முடிந்தது.

2009-ம் ஆண்டு ஐபிஎல் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அந்தத் தொடரில் 8 போட்டிகளில் 98 ரன்களையே அவர் எடுத்தார்.

இப்படியாக இந்திய அணிக்கு ஒரு எதிர்கால கிரிக்கெட் வீரர் கிடைத்துவிட்டார் என்று நினைத்த தருணத்தில் அடுத்த 3 ஆண்டுகளில் 11 போட்டிகளில் 100 ரன்களுக்கும் சற்று அதிகமாக எடுத்து மங்கிப்போனார். ஏப்ரல் 21, 2011-தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக கடைசி போட்டியில் விளையாடினார்.

அதன் பிறகு அஸ்னோட்கர் விளையாடவில்லை. ஐபிஎல் கிரிக்கெட் ஒரு முதற்படிதான், அதில் எடுக்கப்படும் ரன்களை வைத்து ஒருவரை உயர்தர கிரிக்கெட்டிற்கு நேரடியாகத் தேர்வு செய்ய முடியாது என்பது அஸ்னோட்கர் விஷயத்தில் உறுதியானாலும், அவரது திறமைகளை உயர்மட்டத்துக்கு எடுத்துச் செல்வது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் கடமையாகும். அஸ்னோட்கர் சரியாக ஊக்குவிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x