

டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக, டெல்லியில் நடந்த ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடும் மழை காரணமாக பல முறை ஆட்டம் தடைபட்டதால், ஹைதராபாத் அணிக்கான வெற்றி இலக்கு 5 ஓவர்களில் 43 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது. 4.2 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை அந்த அணி தொட்டது
முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 143 ரன்களை எடுத்தது. ஹைதராபாத் அணி களமிறங்கி, முதல் ஓவர் முடிந்த போது, மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் வெற்றி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.
12 ஓவர்களில் 97 ரன்கள் என்ற இலக்குடன் மீண்டும் ஆட்டம் சிறிது நேரத்திற்கு பின் தொடர்ந்தது. 2-வது ஓவரில் தவாண் 4 ரன்களுக்கு வீழ்ந்தார். அந்த ஓவரின் முடிவில் மீண்டும் மழையால் ஆட்டம் நின்றது.
அரை மணிநேரம் கழித்து தொடர்ந்த ஆட்டத்தில், 5 ஓவர்களில் 43 ரன்கள் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. 3-வது ஓவரில் சுக்லா ஆட்டமிழந்தாலும், தொடர்ந்து ஆடிய வார்னர் மட்டுமெ ஓஜாவின் ஆட்டத்தால் 4.2 ஓவர்களிலேயே ஹைதராபாத் அணி 44 ரன்களை எட்டி வெற்றியடைந்தது. குறிப்பாக ஓஜா இரண்டு சிக்ஸர்கள் அடித்து அணிக்கான முக்கிய ரன்களை சேர்க்க முக்கியக் காரணமாக இருந்தார்.
முன்னதாக டாஸில் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. இந்தத் தொடரில் முதல் முறையாக துவக்க வீரராக களமிறங்கினார் டெல்லி அணியின் கேப்டன் பீட்டர்சன். மற்றொரு துவக்க வீரர் டி காக் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி வந்த பீட்டர்சன் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
களத்தில் இருந்த அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார் தினேஷ் கார்த்திக். மிஷ்ராவின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்து 25 ரன்களுக்கு அகர்வால் வெளியேறினார். 13 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்களை டெல்லி எடுத்திருக்கையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்திற்கு பின் தொடர்ந்த ஆட்டத்தில் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே டெல்லியால் எடுக்க முடிந்தது. குறிப்பாக கடைசி 5 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே அந்த அணி சேர்த்தது.